பேஸ்புக் பங்குகள் சரிவு ஜூகர் பெர்க்கை முந்தும் முகேஷ் அம்பானி, அதானி

புதுடெல்லி: பேஸ்புக் பங்குகள் சரிவை கண்டதால், உலக பணக்காரர்கள் பட்டியலில் மார்க் ஜூகர் பெர்க்கை இந்தியாவின் முகேஷ் அம்பானி, கவுதம் அதானி விரைவில் முந்த உள்ளனர். உலகின் முன்னணி சமூக வலைதளமான பேஸ்புக்கில் புதிதாக சேரும் பயனாளர்கள் எண்ணிக்கை வெகுவாக சரிந்து வருகிறது. மேலும், பாதுகாப்பு அம்சங்களில் செய்யப்பட்ட திருத்தம் காரணமாக பேஸ்புக்கில் விளம்பரம் செய்யும் நிறுவனங்களும் முதலீடுகளை குறைத்துக் கொண்டுள்ளன. இந்த விவகாரத்தால், அமெரிக்காவின் நியூயார்க் பங்குச் சந்தையில் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவின் பங்குகள் 26 சதவீதம் கடும் வீழ்ச்சி கண்டு வருகிறது.

இதனால், பேஸ்புக் நிறுவனர் ஜூகர் பெர்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் பின்னடைவை சந்தித்து வருகிறார். நேற்றைய நிலவரப்படி ஜூகர் பெர்க் 89.4 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.6.7 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் பணக்காரர்கள் பட்டியலில் 10வது இடத்தில் உள்ளார். இந்தியாவின் முகேஷ் அம்பானி (ரூ.6.63 லட்சம் கோடி), கவுதம் அதானி (ரூ.6.60 லட்சம் கோடி) ஆகியோர் முறையே 11, 12வது இடத்தில் உள்ளனர். சொத்து மதிப்பில் பெரிய வித்தியாசம் இல்லாததால் அம்பானி, அதானி இருவரும் நிரந்தரமாக ஜூகர் பெர்க்கை விரைவில் முந்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: