×

வரும் 15ம்தேதி முதல் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நேரடியாக இலவச டிக்கெட்: தேவஸ்தான அதிகாரி தகவல்

திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் 15ம்தேதி முதல் பக்தர்களுக்கு நேரடியாக டிக்கெட் வழங்க இருப்பதாக தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் ஜவகர் கூறினார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக சுவாமி தரிசனம் செய்வதில் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டது. கூட்ட நெரிசலை தவிர்க்க இலவச தரிசன டிக்கெட் ஆன்லைனில் மட்டுமே வெளியிடப்பட்டது. இதனால் இணையதள பயன்பாடு உள்ளவர்கள் மட்டும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆனால் இணைய வசதி பயன்பாடு தெரியாத பல்லாயிரக்கணக்கானோர் ஏழுமலையானை தரிசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 15ம்தேதி முதல் இலவச தரிசன டிக்கெட்டை நேரடியாக வழங்கி பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்க உள்ளதாக ேதவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் ஜவகர் கூறியதாவது: தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் வரும் 15ம்தேதி முதல் திருப்பதிக்கு நேரடியாக வரும் பக்தர்களுக்கு இலவச டிக்கெட் வழங்கி சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் 2 ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி நடந்து வந்த சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை, கல்யாண உற்சவம் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் மார்ச் 1ம்தேதி முதல் பக்தர்களுடன் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட வாரிமெட்டு மலைப்பாதை புனரமைக்கும் பணிகள் இன்னும் 3 மாதங்களில் நிறைவு செய்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். தற்போது பெய்த மழையை காட்டிலும் 3 மடங்கு அதிகளவில் மழை பெய்தாலும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருமலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. ஏற்கனவே பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள், லட்டுபிரசாதம் கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கவர் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று திருமலையில் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத வகையில் கொண்டுவரப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

காணிக்கை ரூ2.08 கோடி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று அதிகாலை முதல் இரவு வரை 28,410 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 14,831 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயிலில் தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் ரூ2.08 கோடி காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

Tags : Tirupati Ezhumalayana ,Devasthanam , Direct free ticket to visit Tirupati Ezhumalayana from 15th: Devasthanam official information
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை...