×

பெண்ணுக்கு கொலை மிரட்டல்; ரவுடி படப்பை குணாவிடம் ஆர்டிஓ விசாரணை

ஸ்ரீபெரும்புதூர்: சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்த ரவுடி படப்பை குணாவிடம், பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கு தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ தீவிர விசாரணை நடத்தினார். காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை பகுதியை சேர்ந்தவர் குணா. பிரபல ரவுடி. இவர், காஞ்சிபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பஞ்சாயத்து, ஆள்கடத்தல், கொலை, கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்பட பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். இவருக்கு மனைவி, 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மதுரமங்கலத்தில் சொந்த வீடு கட்டி குடும்பத்துடன் வசித்தார். ரவுடி குணா மீது கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், ஆள் கடத்தல் உள்பட 48 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால், அவரை கைது செய்ய போலீசார், தீவிரம் காட்டினர். இதையொட்டி அவர், கடந்த 2 மாதங்களுக்கு முன் அவர் தலைமறைவானார்.

இதற்கிடையில், ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓவிடம், திருந்தி வாழ்வதாக ரவுடி குணா மனு அளித்தார். இதையடுத்து அவரை, நன்நடத்தையில் இருக்க வேண்டும் என ஸ்ரீபெரும்பத்தூர் ஆர்டிஓ  உத்தரவிட்டார். இதை தொடர்ந்து, அவர் தலைமறைவாகவே இருந்து வந்தார். அந்த நேரத்தில், கீரநல்லூர் பகுதியை சேர்ந்த ரூபாவதி என்ற பெண்ணுக்கு கொலை, குணா மிரட்டல் விடுத்ததாக சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் வந்தது. அதன்பேரில் போலீசார், வழக்குப்பதிவு செய்து ரவுடி குணாவை வலைவீசி போலீசார் தேடி வந்தனர். அப்போது, அவருக்கு சில போலீசார் உடந்தையாக இருப்பது தெரிந்தது. இதையடுத்து, 2 காவலர்களை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், 3 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கிடையே, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் ரவுடிகளை பிடிக்க ஏடிஎஸ்பி வெள்ளத்துரை நியமிக்கப்பட்டார். இதனால், ரவுடி குணாவை, போலீசார் என்கவுன்டர் செய்ய திட்டமிட்டதாக செய்திகள் பரவியது. இதனால் அச்சமடைந்த ரவுடி குணாவின் மனைவி, தனது கணவரின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். அதற்கு, காவல்துறை சார்பில், பல்வேறு வழக்குகள், தொடர்பான விசாரணைக்கு ரவுடி குணாவை தேடி வருகிறோம். அவரை சுட்டு பிடிக்கும் எண்ணமில்லை என பதிலளித்தனர்.

இதையடுத்து, கடந்த 25ம் தேதி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், ரவுடி குணா சரணடைந்தார். அவரை, 15 நாள் பூந்தமல்லி சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், பிரபல ரவுடி குணாமீது கடைசியாக, கீரநல்லூர் பகுதியை சேர்ந்த ரூபாவதி என்ற பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கு தொடர்பாக, ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ அலுவலகத்துக்கு நேற்று காலை ரவுடி குணாவை, போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். அவரிடம் ஆர்டிஓ சைலேந்திரன் தீவிர விசாரணை நடத்தினார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Tags : RTO ,Rowdy Padappai Guna , Death threats to woman; RTO investigation into Rowdy Padappai Guna
× RELATED மேட்டூர் ஆர்டிஓ அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு