×

சென்னை மாநகராட்சிக்கு திமுகவில் போட்டியிட டாக்டர்கள், இன்ஜினியர்கள், வக்கீல்களுக்கு அதிக வாய்ப்பு

சென்னை: சென்னை மாநகராட்சியில் திமுக சார்பில் போட்டியிட டாக்டர்கள், இன்ஜினியர்கள், வக்கீல்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.திமுக ேவட்பாளர் பட்டியல் தயாரிப்பு என்பது ராணுவத்திற்கு வீரர்களை தேர்வு செய்வது போல கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும். கட்சியில் உழைத்தவர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்க வேண்டும், அது மட்டுமல்லாமல் படித்தவர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்களுக்கு உத்தரவிட்டு இருந்தார்.  இந்த உத்தரவுக்கு ஏற்றார் போல் வேட்பாளர் தேர்வு என்பது தமிழகத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் இருந்தது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் உள்ள 165 இடங்களில் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 6 வக்கீல்கள், 2 இன்ஜினியர்கள், 3 டாக்டர்கள், 5 எம்.பி.ஏ. பட்டதாரிகள் மற்றும் பிஏ, பிஎஸ்சி பட்டதாரிகளுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை தோற்கடிக்க செய்து 20 ஆண்டுக்கு பிறகு ராயபுரத்தில் திமுகவை வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற அக்கட்சியின் வடசென்னை மாவட்ட பொறுப்பாளரான இளைய அருணாவுக்கு சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மதுரவாயல் 150வது வார்டில் மதுரவாயல் தொகுதி திமுக வேட்பாளர் காரப்பாக்கம் கணபதி எம்.எல்.ஏ.வின் மனைவி ஹேமலதா போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதே போல முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மகன் பரிதி இளம்சுருதி 99வது வார்டில் போட்டியிடுகிறார். அங்கு அவர் அதிமுக சார்பில் களம் இறக்கப்பட்டுள்ள முன்னாள் ஐ.ஏ.ஏஸ். அதிகாரி சிவகாமியை எதிர்த்து களம் இறங்குகிறார்.

 கொரோனாவால் உயிரிழந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனின் மகன் ராஜா அன்பழகனுக்கும் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட இந்த முறை வாய்ப்பு கிடைத்துள்ளது. இதே போல திரு.வி.க.நகரில் பெரம்பூர் முன்னாள் எம்.எல்.ஏ. செங்கை சிவத்தின் உறவினர்
ஆர்.பிரியா 74வது வார்டிலும், திருவொற்றியூர் எம்.எல்.ஏ.கே.பி.சங்கரின் சகோதரர் கே.பி.சொக்கலிங்கத்துக்கு 5வது வார்டிலும் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. அதே போல் தி.நகர் கே.ஏழுமலை, பாலவாக்கம் விஸ்வநாதன், கே.கே.நகர் தனசேகரன், பெருங்குடி ரவிச்சந்திரன், மகேஷ்குமார், ராமலிங்கம், ஏ.ஆர்.பி.எம். காமராஜ், மதன் மோகன் உள்ளிட்ட முன்னாள் கவுன்சிலர்களுக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பலரின் உயிரை காப்பாற்றியவருக்கு சீட்
ெசன்னை மடிப்பாக்கம் திமுக வட்ட செயலாளர் செல்வம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெட்டிக் கொல்லப்பட்டார். அவர் தனது மனைவி சமீனா செல்வத்துக்கு சீட் கேட்டு மனு செய்திருந்தார். இந்த நிலையில் அவரது மனைவிக்கு 188 வார்டில் போட்டியிட சீட் வழங்கப்பட்டுள்ளது. இதே போல திருவொற்றியூர் குடிசை மாற்று வாரிய வீடு இடிவதற்கு முன்பு பலரை காப்பாற்றிய திருவொற்றியூர் கிழக்கு திமுக பகுதி செயலாளர் தனி அரசுக்கு மாநகராட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்ததுள்ளது. அவர் 10வது வார்டில் போட்டியிடுகிறார்.


Tags : Chennai Municipality ,Dimukha , To contest in DMK for Chennai Corporation Doctors, engineers, More opportunity for lawyers
× RELATED சென்னையில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி தொடக்கம்