×

கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய பெருவிழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்க இலங்கையை வலியுறுத்த வேண்டும்: ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: கச்சத்தீவு பெருவிழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்க இலங்கை அரசை வலியுறுத்த கோரி, ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்தில், புனித அந்தோணியார் வருடாந்திர பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கொண்டாடப்படுகிறது. ஆனால், பல்வேறு காரணங்களை முன்வைத்து இந்த ஆண்டு திருவிழாவில் தமிழக மீனவ பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக செய்தி எனது கவனத்திற்கு வந்துள்ளது.

 தமிழக மீனவர்கள் மற்றும் பக்தர்கள் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்துடன் ஆன்மிக மற்றும் உணர்வுப்பூர்வமான தொடர்பை பல ஆண்டுகளாக கொண்டுள்ளனர். கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க இலங்கை அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது தமிழக மீனவர்களிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரியமாக புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்திர பெருவிழாவில் தமிழக மீனவர்கள் தடையின்றி பங்கேற்பதை உறுதி செய்யுமாறு இலங்கை அரசை வலியுறுத்திட வேண்டும். இந்த முயற்சி இரு நாட்டு மக்களிடையே நல்லுறவை பேணுவதை உறுதி செய்யும் என்று தான் நம்புகிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.முதல்வரின் கடிதத்தை, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை நேற்று டெல்லியில் நேரில் சந்தித்து வழங்கினார்.

Tags : Tamil Nadu ,Sri ,Lanka ,Kachchativu St. Anthony's Church Festival ,Chief Minister ,MK Stalin ,Union Minister ,Jaisankar , At the festival of St. Anthony's Church, Kachchativu Tamil Nadu fishermen to participate Sri Lanka must be urged: Chief Minister MK Stalin's letter to Union Minister Jaisankar
× RELATED மீனவர் பிரச்னை குறித்து முக்கிய...