வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களம் இறங்கும் இஷான்கிஷன்?

அகமதாபாத்: பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி.20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் ஒருநாள் போட்டி முறையே பிப்.6, 9, 11ம் தேதிகளில் அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்திய அணியில் தவான், ஸ்ரேயாஸ் அய்யர், ருதுராஜ் கெய்க்வாட், சைனி ஆகிய 4 வீரர்கள் உள்பட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அக்சர் பட்டேலுக்கும் தொற்று பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கே.எல்.ராகுலும் தனது சகோதரரின் திருமணத்திற்காக முதல் ஒருநாள் போட்டியில் இருந்து விலகியதால் கேப்டன் ரோகித்சர்மாவுடன் தொடக்க வீரராக களம் இறங்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது. இதனிடையே அணியில் கூடுதலாக மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டார். நேற்று அகமதாபாத் சென்ற அவர் 3 நாள் தனிமைப்படுத்தல் முடிந்து போட்டி நடைபெறும் ஞாயிறு அன்று அணியுடன் இணைவார்.

இதனிடையே நேற்று புதிதாக யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை. இதனால் ஏற்கனவே கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீரர்களை தவிர மற்ற அனைவரும் அகமதாபாத் மோதிரா ஸ்டேடியத்தில் பயிற்சியைத் தொடங்கினர். இதனிடையே டி20 அணியில் மட்டும் சேர்க்கப்பட்டிருந்த 23 வயதான இஷான் கிஷன் ஒருநாள் போட்டிக்கான அணியிலும் சேர்க்கப்பட்டுள்ளார்.

இஷான் கிஷான் ஏற்கனவே தேசிய அணியின் பயோ-பப்பில் ஒரு பகுதியாக இருந்தார், இதனால் அவர் கட்டாய தனிமைப்படுத்தப்பட்ட வேண்டிய அவசியமில்லை. இதனால் அவர் முதல் போட்டியில் ஆடும் லெவனில் இடம் பிடிப்பார் என தெரிகிறது.

இஷான் கிஷன் இதற்கு முன் 2 ஒருநாள் போட்டியில் (இலங்கைக்கு எதிராக) விளையாடி உள்ளார். ரோகித்சர்மாவுடன் இஷான் கிஷன் தொடக்க வீரராக களம் இறங்குவார் என கூறப்படுகிறது. இதனிடையே இஷான் கிஷன் ரோகித் ஷர்மாவுடன் தொடங்கினால், இஷானின் ஸ்டிரைக் ரேட் எப்போதும் அதிகமாக இருக்கும், அதாவது அவர் பவர் பிளேயைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என முன்னாள் வீரர் சபாகரீம் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள வீரர்கள் அதில் இருந்து மீண்டாலும் 7 நாட்களுக்கு பின்னர் தான் அணியுடன் இணைவார்கள். இதனால் 2வது ஒருநாள் போட்டியில் அவர்கள் விளையாட முடியாது.

டி.20 தொடரில் ரசிகர்களுக்கு அனுமதியில் குழப்பம்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒரு நாள் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில், கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெறும் 3டி.20 போட்டிகளில் 75 சதவீதம் ரசிகர்கள் (சுமார் 50 ஆயிரம் பேர்) அனுமதிக்கப்படுவார்கள் எனவும், மாநில அரசு இதற்கு அனுமதி அளித்துள்ளதாகவும் தகவல் வெளியானது. டிக்கெட் கட்டணம் ரூ.650, ரூ.1000 மற்றும் ரூ.1500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நாட்டில் நிலவும் கோவிட் சூழ்நிலைக்கு மத்தியில் பிசிசிஐ எந்த ஆபத்தையும் எடுக்க விரும்பவில்லை என தெரிகிறது. இதனால் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படுமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

நலமாக இருக்கிறேன் -தவான்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தி கொண்டுள்ள ஷிகர் தவான் டுவிட்டரில் ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார். “அனைவருக்கும் நன்றி. நான் நலமாக உள்ளேன். என் மீது காட்டிய அன்பை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories: