×

கோயில் இடத்தை மீட்டுத் தரக்கோரி தாராபுரம் தாலுகா அலுவலகம் முற்றுகை

தாராபுரம் : திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ளது சூரிய நல்லூர் கோப்பனகவுண்டன்பாளையம் கிராமம். இங்கு கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக 60க்கும் மேற்பட்ட அருந்ததியர் இன மக்கள் அரசு வழங்கிய வீட்டுமனை பட்டா இடத்தில் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஆதி தமிழர் ஜனநாயக பேரவை அமைப்பின் நிறுவனர் பவுத்தன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் தாராபுரம் தாசில்தார் அலுவலகத்தில் திரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் தாலுகா அலுவலக அதிகாரிகளிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: கோப்பனகவுண்டன்பாளையம் கிராமத்தில் எங்களுக்கு வழங்கப்பட்ட அரசு நிலத்தின் அருகே உள்ள பட்டத்தரசி அம்மன், கருப்பராயன் கோயில்கள் உள்ளது. இக்கோயில் அருகில் உள்ள விவசாய நத்தம் பூமியை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். மேலும் வழிபாடு செய்ய இடையூறு செய்து வருகின்றனர். இப்பிரச்சனை குறித்து மாவட்ட கலெக்டர், கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

எனவே கோயிலுக்குச் சொந்தமான எங்களது வழிபாடு இடத்தை அளவீடு செய்து கல் நட்டு கிராம மக்களிடம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட தாலுகா அலுவலக அதிகாரிகள்  உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

Tags : Tarakori Tarapuram Thaluka , Tarapuram taluka office besieged to demand restoration of temple site
× RELATED பரந்தூர் -நிலம் எடுப்பிற்கான அனுமதி ஆணை வெளியீடு