×

பொன்னமராவதி அருகே 18 பெருங்கற்கால சின்னங்கள் கண்டுபிடிப்பு

பொன்னமராவதி : பொன்னமராவதி அருகே தச்சம்பட்டி கிராம எல்லைக்குட்பட்ட வெங்களமேடு எனுமிடத்தில் 18 பெருங்கற்கால சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொன்னமராவதி அருகே தச்சம்பட்டி வெங்கல மேடு எனுமிடத்தில் 18 கல் வட்டத்துடன் கூடிய கற்பதுக்கைகள், கற்குவை ஆகியவை புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் தலைவர் ராஜேந்திரன் நிறுவனர் மணிகண்டன் இணைச்செயலாளர் பீர் முகமது, ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார், தொல்லியல் ஆர்வலர் பழனியப்பன் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழக தொல்லறிவியல் முனைவர் பட்ட ஆய்வாளர் மணிகண்டன் கூறியதாவது:

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட தொல்லியல் சின்னங்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன. குறிப்பாக வரலாற்றுக்கு முந்தைய காலத்திய கல்லாயுதம், பாறை ஓவியங்கள், நெடுங்கல், பெருங்கற்கால சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் மிக அபரிமிதமாக இரும்புக் காலத்தை சேர்ந்த பெருங்கற்படை சின்னங்கள் அடையாளம் காணப்பட்டு பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் பெருங்கற்கால சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.

தச்சம்பட்டி பெருங்கற்கால சின்னங்கள் தச்சம்பட்டி கிராம எல்லைக்குட்பட்ட வெங்கல மேட்டுப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் இருந்த பெருங்கற்கால சின்னங்கள் விவசாய விரிவாக்க பணியின்போது 10க்கும் மேற்பட்ட கற்பதுக்கைகள் சிதைக்கப்பட்டுள்ள நிலையில் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகம் கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இதன் முக்கியத்துவம் குறித்து சம்பந்தப்பட்ட ஓசைக்கு எடுத்துக்கூறி பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் மூலம் அவ்விடத்தில் தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் 18 பெருங்கற்கால கற்குவைகள், கல்வட்டத்துடன் கூடிய கல் பதுக்கைகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இவை 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால சின்னங்களாகும். இங்கே காணப்படும் கற்பலகை ஒன்றில் ஒன்றரை அடி விட்டமுடைய கற்துளை காணப்படுகிறது. இது கொடுமணல் உள்ளிட்ட இடங்களில் அடையாளம் காணப்பட்ட கற்பதுக்கை அமைப்போடு ஒத்துப்போவது சிறப்பு வாய்ந்ததாகும்.

இங்குள்ள பலகைக் கற்கள் 8 அடி உயரம் கொண்டதாகவும் 7 அடி அகலம் கொண்டதாகவும் இருக்கிறது.இந்த பகுதியில் செம்புராங்கற்கள் முழுமையாக இல்லாத நிலையில் அதிக தொலைவில் இருந்து இங்கு கொண்டு வரப்பட்டு கல்வட்டம் அமைக்கப்பட்டிருப்பது பண்டைய மக்களின் வாழ்வியலில் பெருங்கற்கால சின்னங்கள் எத்தகைய முக்கியத்துவம் பெற்றிருந்தது என்பதை உணர்த்துவதாக உள்ளது.

Tags : Ocean ,Ponnamaravati , Discovery of 18 monuments near Ponnamaravathi
× RELATED நாடாளுமன்ற தேர்தல் மாலத்தீவில் ஆளும்...