சென்னை மாம்பலம் கால்வாயில் கட்டட கழிவுகள் அகற்ற ஆகும் செலவை ஸ்மார்ட் சிட்டி ஓப்பந்ததாரர்களிடம் வசூலிக்க வேண்டும்: தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: சென்னை மாம்பலம் கால்வாயில் கட்டட கழிவுகள் அகற்ற ஆகும் செலவை ஸ்மார்ட் சிட்டி ஓப்பந்ததாரர்களிடம் வசூலிக்க வேண்டும் என்று தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் வெளியேறாதது குறித்தது பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை செய்தது. இதில் கால்வாயில் கட்டுமான கழிவுகள் கொட்டப்பட்டதால் மழைநீர் தேங்கியதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

சென்னையில் கடந்த நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் பெய்த மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த வெள்ளநீரை அகற்றுவதற்கு மாநகராட்சி சார்பில் தி நகர் பகுதிகள் வடிகால்கள்  மூலமாக வெளியேற்ற முயன்றபோது, அதுவழியாக மழைநீர் செல்லாமல் தேங்கியது. இதனால் அங்குள்ள குடியிருப்பு பகுதிகள் பலநாட்கள் மழைநீர் தேங்கியிருந்தது.

இது தொடர்பாக சென்னையில் உள்ள தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தண்ணீர் வடியாமல் இருப்பது தொடர்பாக மாநகராட்சியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதில் திநகர், ஆயிரம்விளக்கு, தேனாம்பேட்டை, மேற்கு மாம்பலம், போன்ற குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறக்கூடிய தண்ணீர் மாம்பலம் கால்வாய் வழியாக வெளியேறுகிறது என்றும், மாம்பலம் கால்வாயை சீரமைக்க கடந்த ஆட்சியில் 6 ஒப்பந்ததார்களிடம் கொடுக்கப்பட்ட போதிலும் அவர்கள் கால்வாய் சீரமைக்கும் பணியை முறையாக மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டது.

சீரமைப்பு பணிகளின் பொது எடுக்கப்பட்ட கட்டடக்கழிவுகளை கால்வாய் அருகே ஆங்காங்கே கொட்டிவிட்டு சென்றதால் அது நீர்வழித்தடத்தை அடைத்து கொண்டுள்ளது. இதனால் மழைநீர் செல்லமுடியாமல் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கட்டடக்கழிவுகளை அகற்றுவதைக்கான செலவை ஸ்மார்ட் சிட்டி ஓப்பந்ததாரர்களிடம் வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, இந்த வழக்கின் விசாரணையை பிப்ரவரி 28-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: