ஜெகன்மோகன் முதல்வராக பதவியேற்று 3 வருடங்களாக எந்த நலத்திட்ட பணிகளும் செய்யவில்லை-தெலுங்கு தேசம் கட்சி எம்எல்சி குற்றச்சாட்டு

சித்தூர் : ஜெகன்மோகன் முதல்வராக பதவியேற்று 3 வருடங்களாகியும் சித்தூர் மாநகருக்கு எந்த நலத்திட்ட பணிகளும் செய்யவில்லை என தெலுங்கு தேசம் கட்சி எம்எல்சி குற்றம்சாட்டினார்.

சித்தூர் 48வது வார்டு சந்தப்பேட்டை பகுதியில் தெலுங்கு தேசம் கட்சி எம்எல்சி துரை பாபு தலைமையில் கவுரவ சபை நடைபெற்றது. பின்னர், எம்எல்சி துரை பாபு கூறியதாவது: தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு கட்சி சார்பில் ஒவ்வொரு கிராமங்கள், நகரங்கள், வார்டு பகுதிகளிலும் தெலுங்கு தேசம் கட்சி கவுரவ சபை நடத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி சித்தூர் மாநகரத்தில் 48வது வார்டு சந்தப்பேட்டை பகுதியில் கவுரவ சபை நடைபெற்றது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் முதலமைச்சராக பதவியேற்று 3 வருடங்கள் நெருங்க உள்ள நிலையில் சித்தூர் மாநகரத்தில் இதுவரை ஒரு நலத்திட்ட பணிகள் கூட செய்யவில்லை. தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் முன்னாள் மேயர் கட்டாரி ஹேமலதா தலைமையில் மாநகர் முழுவதும் சாலைகள், கழிவுநீர் கால்வாய், மின்சாரம், குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டது.

சந்தைப்பேட்டை பகுதியில் மட்டும் 19 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது ஆளும் கட்சி அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை சந்தைப்பேட்டை பகுதியில் ஒரு நலத்திட்ட பணிகள் கூட செய்யவில்லை, ஏராளமான பொதுமக்கள் குடிநீர் இல்லாமலும், கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாமலும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் முதியோர் உதவித்தொகை தகுதி உள்ள முதியவர்களின் பெயர்களை நீக்கி அவர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படவில்லை. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. அதேபோல் ஏராளமானோருக்கு ரேஷன் கார்டு ரத்து செய்து உள்ளார்கள்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வார்டு செயலாளர் அலுவலகத்தில் முறையிட்டால், உங்களுக்கு மின்சார கட்டணம் அதிகமாக உள்ளது. ஆகவே உங்கள் ரேஷன் கார்டை ரத்து செய்துள்ளோம் என தெரிவித்து விடுகிறார்கள். தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் வீட்டுமனை பட்டாவுக்கு பதிவு செய்து கொண்டவர்களுக்கு தற்போதுள்ள ஆட்சியில் வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை. இதனால் ஏழை எளிய மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தெலுங்கு தேசம் கட்சி சார்பில் ஒவ்வொரு வீடாகச் சென்று ஆளும் கட்சியின் துரோகங்களை விளக்கி கூறி கொண்டு பிரசாரம் செய்து வருகிறோம். ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நான் மீண்டும் பதவிக்கு வந்தவுடன் அனைவரின் கஷ்டங்களை தீர்த்து வைப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 முன்னாதாக, முன்னாள் மேயர் கட்டாரி ஹேமலதா, 48வது வார்டு தெலுங்கு தேசம் கட்சி பொறுப்பாளர் ஈஸ்வர், பிற்படுத்தப்பட்டோர் சங்க மாவட்ட தலைவர் சண்முகம், முஸ்லிம் சிறுபான்மையின சங்க மாவட்ட தலைவர் அத்து பாய், துணை தலைவர் நவாஸ் ஷெரீப் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு பொதுமக்களிடையே துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு மேற்கொண்டனர்.

Related Stories: