×

ஆந்திராவில் சம்பள உயர்வை வழங்காமல் புதிய பிஆர்சியை அறிவித்த அரசுக்கு எதிராக விஜயவாடாவை முற்றுகையிட்ட அரசு ஊழியர்கள்

* ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் பரபரப்பு

* வரும் 7ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தம் என அறிவிப்பு

திருமலை : ஆந்திராவில் சம்பள உயர்வு வழங்காமல் புதிய பிஆர்சியை அறிவித்த ஜெகன்மோகன் அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் விஜயவாடாவை நேற்று முற்றுகையிட்டனர். மேலும், வரும் 7ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.ஆந்திர மாநிலத்தில் அரசு ஊழியர்கள் ஜெகன் மோகன் அரசுக்கு எதிராக தற்போது போர்க்கொடி தூக்கி உள்ளனர். சம்பள உயர்வை வழங்காமல் புதிய பிஆர்சியை அறிவித்த ஜெகன் அரசுக்கு எதிராக ஆந்திராவில் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கத்தினர் உட்பட அனைத்து துறை ஊழியர்  சங்க கூட்டமைப்பினர் கடந்த சிலதினங்களாக தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலம் முழுவதும் உள்ள கலெக்டர் அலுவலகங்கள் முன் முற்றுகை போராட்டம் நடத்தினர். அவர்களை ஆந்திர அரசு கைது செய்து, பின்னர் விடுவித்தது.

இந்நிலையில், வரும்  7ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அரசு முதன்மை செயலாளருக்கு நோட்டீஸ் வழங்கினர். இதனால் 7ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தினால் அரசு பணிகள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சிகள் துறை அமைச்சர் சத்தியநாராயணா, போக்குவரத்து துறை அமைச்சர் வெங்கட ராமைய்யா, அரசு ஆலோசகர் ராமகிருஷ்ணா, முதன்மை செயலாளர் சமீர் சர்மா தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை அமைத்து  ஊழியர் சங்கத்தினரிடம் 3 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் உடன்பாடு ஏதும் ஏற்படாமல் தோல்வியில் முடிந்தது.

இதனால், நேற்று வியாழக்கிழமை விஜயவாடாவை முற்றுகையிடும் போராட்டத்திற்கு ஊழியர் சங்கத்தினர் ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால், ஊழியர் சங்கத்தினரின் முற்றுகை போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்டத்தில் இருந்து ஊழியர் சங்கத்தினர் விஜயவாடா வருவதை தடுப்பதற்காக போலீசார் பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு ஊழியர் சங்கத்தினரை அந்தந்த பகுதியிலேயே கைது செய்து திருப்பி அனுப்பினர்.
இதனை மீறியும் நேற்று விஜயவாடாவில் ஆயிரக்கணக்கான ஊழியர் சங்க கூட்டமைப்பினர் முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, ‘அரசு ஊழியர்களின் வயது வரம்பை 60ல் இருந்து 62 ஆக உயர்த்துவதாக அறிவித்து, சம்பள உயர்வுக்கு மாற்றாக சம்பள குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஊழியர்கள் பென்ஷன் தொகை குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே புதிதாக கொண்டுவரப்பட்ட பிஆர்சி (சம்பள உயர்வு ஆணையம்) பரிந்துரையை ரத்து செய்து, ஏற்கனவே வழங்கி வந்த சம்பளத்தை வழங்க வேண்டும் என நாங்கள் தொடர்ந்து கூறி வந்தோம்.  அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்காமல் அரசு உள்ளது. எனவே விஜயவாடாவில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டோம். வரும் 7 தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என ஊழியர் சங்க கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.

இதேபோன்று ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழக ஊழியர்களும் தங்களை அரசுடன் இணைத்து அறிவிப்பு மட்டும் வெளியிட்டது. ஆனால், சம்பள உயர்வு,  அகவிலைப்படி உள்ளிட்ட பயன்கள் எதையும் இதுவரை இரண்டு ஆண்டுகளாகியும் எங்களுக்கு வழங்கவில்லை. எனவே எங்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் சங்கத்தினர் அறிவித்தபடி 7ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் போக்குவரத்து ஊழியர் சங்கத்தினரும் கலந்து கொள்ள உள்ளதாக அறிவித்தனர்.

ஆனால், அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்தினர் எக்காரணத்தைக் கொண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை மீறி செயல்பட்டால் ஊழியர்கள் சங்கத்தினர் மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் அரசு தங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் அரசின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து 7ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என அரசு ஊழியர்கள் சங்க கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

Tags : Vijayawada ,PRC ,Andhra Pradesh , Thirumalai: Thousands of civil servants in Andhra Pradesh have come out against the Jaganmohan government for announcing a new PRC without a pay rise.
× RELATED ஆந்திர முதல்வர் மீது கல்வீச்சு: துப்பு கொடுத்தால் சன்மானம்