வாலாஜாவில் புகழ் பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலில் கதவை உடைத்து திருட்டு-மர்ம ஆசாமிகளுக்கு வலை

வாலாஜா :   வாலாஜாவில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள், அங்கிருந்த மானிட்டரை திருடிச்சென்றுள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா டிரங்க் ரோட்டில் பழமையான காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் தினமும் இருவேளை பூஜைகள் நடைபெறும். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். கோயிலை சுற்றி 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. கோயில் பாதுகாப்பு கருதி சிசிடிவி, அலாரம் பொருத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோயிலில் நேற்று அதிகாலை 2 மணியளவில் திடீரென அலாரம் ஒலித்தது. சத்தம் கேட்ட பொதுமக்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் கோயில் நிர்வாகிகள் வந்து கோயிலை திறந்து பார்த்தனர். அப்போது உட்பிரகாரத்திற்கு செல்லும் பிரதான இரும்பு கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அடுத்துள்ள இரும்பு ஷட்டரின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்து. தொடர்ந்து 3வதாக உள்ள மரக்கதவின் பூட்டும் உடைக்க முயற்சி நடந்தது தெரியவந்தது. அங்குள்ள பூஜை பொருட்கள், சுவாமி துணிகள் வைக்கும் அறையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

உள்ளே பீரோவில் இருந்த சுவாமியின் துணிகள், பூஜை பொருட்கள் சிதறிக்கிடந்தது. சிசிடிவி கேமரா மானிட்டர் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து தகவலறிந்த வாலாஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் காண்டீபன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில், நள்ளிரவில் கோயில் சுற்றுச்சுவர் வழியாக மர்ம ஆசாமிகள் எகிறி கோயிலுக்குள் குதித்து உட்பிரகாரத்தில் உள்ள ஒவ்வொரு கதவாக உடைத்துச்சென்றுள்ளனர். அங்கு மரக்கதவை உடைக்க முயற்சிக்கும்போது அதிலிருந்த அலாரம் ஒலித்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த மர்ம ஆசாமிகள் தப்பிச்சென்றிருக்கலாம் என விசாரணையில் தெரியவந்தது.  இதையடுத்து கோயில் கருவறையில் வைத்திருந்த டிஸ்க்கை கைப்பற்றி மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். ராணிப்பேட்டையில் 2 நாட்களுக்கு முன் அதிமுக பிரமுகர் சுகுமார் வீட்டில் ₹38 லட்சம் பணம் மற்றும் ₹12 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகள் கேமரா ஹார்டு டிஸ்க் மற்றும் மானிட்டரை திருடிச்சென்றுள்ளனர். தற்போது காசி விஸ்வநாதர் கோயிலில் திருட வந்த மர்ம ஆசாமிகள் மானிட்டரை திருடிச்சென்றுள்ளனர். எனவே இரு கொள்ளை சம்பவத்திலும் ஒரே கும்பல் ஈடுபட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயிலில் நடந்துள்ள துணிகர திருட்டு சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: