×

தனியாக சென்ற பெண்ணிடம் சில்மிஷம் திருவொற்றியூர் ஏட்டு கைது: சிசிடிவி பதிவு மூலம் நடவடிக்கை

சென்னை: விருதுநகர் மாவட்டம், வில்லிபுத்தூர், மம்சாபுரத்தை சேர்ந்தவர் வனராஜ் (38), தலைமை காவலரான இவர், விருதுநகர் மாவட்டத்தில் இருந்து சென்னை திருவொற்றியூர் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு தலைமை காவலராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். கடந்த 30ம் ேததி இரவு ஆயிரம்விளக்கு வேலஸ் சாலையில் இவர், குடிபோதையில் பைக்கில் சென்றுள்ளார். அப்போது, இளம்பெண் ஒருவர் தனியாக வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார்.

போதையில் இருந்த வனராஜ், அந்த பெண் முன்பு பைக்கை நிறுத்தி, விசாரிப்பது போல் திடீரென சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த இளம்பெண் உதவி கேட்டு அலறினார். அப்போது தலைமை காவலர் வனராஜ், ‘நான் போலீஸ், சத்தம் போட்டால் உன்னை விபசார வழக்கில் கைது செய்துவிடுவேன்’ என்று மிரட்டியுள்ளார். ஆனால் இளம்பெண் வனராஜிடம் போராடியபடி உதவி கேட்டு அலறியுள்ளார்.

இதனால், வனராஜ், தனது பைக்கை எடுத்துக்கொண்டு வேகமாக தப்பித்துள்ளார். அப்போது எதிரே வந்த கார் மீது பைக் மோதி தலைமை காவலர் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பிறகு விபத்து தொடர்பாக பிரச்னை முடிந்து வீட்டிற்கு வந்த வனராஜ், மறுநாள் விடுமுறை எடுத்துள்ளார்.

பாதிக்கப்பட்ட இளம்பெண், ஆயிரம்விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், மர்ம நபர் ஒருவர் தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து, மிரட்டி சென்றதாக புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர். அதில் தலைமை காவலர் வனராஜ் குடிபோதையில் சாலையில் தனியாக நடந்து சென்ற இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பி சென்றதும், பின்னர் எதிரே வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளாகி காயமடைந்ததும் தெரியவந்தது.

அதைதொடர்ந்து ஆயிரம்விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், திருவொற்றியூர் தலைமை காவலர் வனராஜ் மீது ஐபிசி 294(பி), 341, 354, 506(2) மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவு ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நேற்று முன்தினம் அதிரடியாக கைது செய்தனர்.

Tags : Silmisham Tiruvottiyur , Silmisham Tiruvottiyur record arrest of a woman who went alone: Action through CCTV recording
× RELATED தனியாக சென்ற பெண்ணிடம் சில்மிஷம்...