சிப்காட் தொழிற்பூங்காவில் குற்றச் சம்பவங்களை தடுக்க 110 சிசிடிவி கேமராக்கள்: எஸ்பி சுதாகர் துவக்கி வைத்தார்

ஸ்ரீபெரும்புதூர்: ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில், குற்றச்சம்பவங்களை தடுக்கும் விதமாக 110 சிசிடிவி கேமராக்களை, காஞ்சிபுரம் எஸ்பி சுதாகர் நேற்று துவக்கி வைத்தார். ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா அமைந்துள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட பன்னாட்டு மற்றும் உள்நாட்டு தனியார் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. தொழிற்சாலை மிகுந்த பகுதி என்பதால், அடிக்கடி கொலை, கொள்ளை, வழிப்பறி உள்பட பல்வேறு குற்றச் சம்பவங்கள் மற்றும் சாலை விபத்துகள் நடக்கின்றன. இதனை தவிர்க்கவும், குற்றவாளிகளை எளிதில் கண்டறியவும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் ஒரகடம் காவல் நிலைய கட்டுபாட்டில் 110 அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளனது.

பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையம், மார்க்கெட் ஆகிய பகுதிகள், விபத்து நேரிடும் இடங்கள் உள்பட பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களின் எண்களை கண்டுபிடிப்பதோடு, அந்த நபரின் முகத்தையும் புகைப்படம் எடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு, பொருத்தப்பட்டுள்ளன. இதையொட்டி, சிசிடிவி கேமரா செயல்பாட்டினை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், காஞ்சிபுரம் எஸ்பி சுதாகர் கலந்து கொண்டு, சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டினை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒரகடம் இன்ஸ்பெக்டர் சுரேந்தர், தனியார் நிறுவன ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: