×

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்; மறுஆய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மறு ஆய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. முல்லைப் பெரியாறு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடர் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 26ம் தேதி ஒரு புதிய பதில் மனு தாக்கல் செய்ப்பட்டது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட தமிழக ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மறுஆய்வு செய்ய வேண்டிய அவசியம் தற்போது இல்லை. இதுதான் தமிழக அரசின் நிலைப்பாடாக உள்ளது என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் உமாபதி மற்றும் குமணன் உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய மனு ஒன்று தாக்கல் செய்துள்ளனர். அதில், ‘முல்லைப் பெரியாறு அணையை மறுஆய்வு செய்ய வேண்டியதில்லை. ஏனெனில்  அணையின் பாதுகாப்பிற்கு எந்த அபாயமும் கிடையாது. நிலுவையில் இருக்கும் பராமரிப்பு பணிகளை முடிக்க கேரள அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை.

எனவே பணிகளை மேற்கொள்ள கேரள அரசு உரிய ஒத்துழைப்பை வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். பணிகள் நிலுவையில் இருக்கும் போது அணையை எப்படி மறுஆய்வு செய்ய முடியும். அதற்கான சாத்தியமே கிடையாது. அதனால் இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளனர்.

ஒன்றிய அமைச்சரிடம் கோரிக்கை: இந்த நிலையில், அரசுமுறை பயணமாக விமானம் மூலம் நேற்று டெல்லி சென்ற தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஜல்சக்தி அமைச்சகத்தில் இருக்கும் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவாத்தை அவரது அலுவலகத்தில் நேற்று மாலை நேரில் சந்தித்து பேசினார். அப்போது, முல்லைப் பெரியாறு மறுஆய்வு, மேகதாது, மற்றும் மாநிலத்தில் இருக்கும் மற்ற நீர்நிலைகள் தொடர்பான விவகாரம் ஆகியன குறித்து  கோரிக்கை மனுவை கொடுத்துள்ளதாக தெரிகிறது.

Tags : Mullin ,Affair ,Tamil Nadu Government ,Supreme Court , Mullaperiyar Dam issue; There is no room for talk of review: Tamil Nadu government petition in the Supreme Court
× RELATED உள்ளாட்சித் தேர்தல் பணியின்போது...