×

சீனாவின் பொய் அம்பலமானது கல்வான் மோதலில் சீன வீரர்கள் 42 பேர் பலி: ஆஸ்திரேலிய பத்திரிகையில் ஆய்வு கட்டுரை

புதுடெல்லி: கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியாவுடன் ஏற்பட்ட மோதலின் போது தனது நாட்டை சேர்ந்த 4 ராணுவ வீரர்கள் மட்டுமே இறந்தாக சீனா கூறியிருந்த நிலையில், மேலும் 38 சீன வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ஆஸ்திரேலிய பத்திரிக்கையில் ஆய்வு கட்டுரை வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய -சீன ராணுவ வீரர்கள் இடையே லடாக் எல்லையில்  கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில், இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். ஆனால், சீனாவின் தரப்பில் 40 வீரர்கள் பலியானதாக தகவல் வெளியானது. ஆனால், சீனா வாய் திறக்கவில்லை. பின்னர், கடந்த பிப்ரவரியில் கல்வான் மோதலில் வீர மரணம் அடைந்த 4 வீரர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தது.

இந்நிலையில், கல்வான் மோதலில் சீனா வீரர்கள் நான்கு பேர் மட்டுமே உயிரிழக்கவில்லை என்றும், மேலும் 38 வீரர்கள் பலியானதாக தற்போது தகவல்  வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த ‘தி கிளாக்சன்’ என்ற பத்திரிக்கை, ‘கல்வான் டிகோடட்’ என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக சமூக ஊடக ஆராய்ச்சியாளர்கள் குழு மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்த கட்டுரை தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ளதாவது: கல்வான் பள்ளத்தாக்கில் உண்மையில் நடந்தது என்ன? மோதலுக்கு வழி வகுத்த காரணம் என்ன? உள்ளிட்டவை சீனாவால் மறைக்கப்பட்டுள்ளது. என்ன நடந்தது என்று உலகுக்கு சீனா எடுத்துக் கூறியது அனைத்தும் கட்டுக்கதைகள்.

ஏராளமான வலைப்பதிவு, இணையதள பக்கங்களில் கல்வான் பள்ளத்தாக்கு குறித்த செய்திகள் நீக்கப்பட்டுள்ளன. இந்திய ராணுவம் அமைத்த தற்காலிக பாலம் தொடர்பாகதான் இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருதரப்பு ஒப்பந்தத்தை மீறி, இரு நாட்டுக்கும் இடையே உள்ள ராணுவமில்லா பகுதியில் சீனா சட்ட விரோதமாக உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டது.  2020ம் ஆண்டு ஏப்ரலில் இருந்தே தனது கண்காணிப்பு எல்லையை சீனா விரிவுபடுத்த தொடங்கியது. இதனால், அப்பகுதிகளை கண்காணிப்பதற்காக கல்வான் ஆற்றின் மீது இந்திய வீரர்கள் தற்காலிக நடை பாலத்தை உருவாக்கினர். கர்னல் சந்தோஷ், தலைமையிலான இந்திய வீரர்கள் உருவாக்கிய தற்காலிக பாலத்துக்கு சீன ராணுவம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

ஜூன் 6ம் தேதி சுமார் 80 சீன ராணுவ வீரர்கள் பாலத்தை சேதப்படுத்துவதற்கு வந்தனர். சுமார் 100 இந்திய வீரர்கள் அவர்களின் முயற்சியை தோல்வியடைய செய்தனர். இதனை தொடர்ந்து, இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில், குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் தங்களின் ராணுவ வீரர்களை திரும்ப பெறுவது என்றும், அங்கு ஏற்படுத்தப்பட்ட கட்டமைப்பு வசதிகளை அகற்றிக் கொள்வது என்றும் இரு நாட்டு ராணுவமும் ஒப்புக் கொண்டன. ஆனால் ஒப்பந்தத்தின்படி தான் ஏற்படுத்திய கட்டமைப்புக்களை சீனா அகற்றாமல் இந்திய வீரர்கள் ஏற்படுத்திய தற்காலிக பாலத்தை சேதப்படுத்தியது.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய பகுதிக்கு கர்னல் சந்தோஷ் பாபு தலைமையிலான வீரர்கள் விரைந்தனர். இதேபோல், சீனாவின் கர்னல் கீ பவாப் தலைமையிலான வீரர்கள் வந்தனர். பிரச்னை குறித்து விவாதிக்காமல் இந்திய வீரர்களை தாக்கும்படி உடனடியாக தனது வீரர்களுக்கு கர்னல் பவாப் உத்தரவிட்டார். முதலில் தாக்குதலை தொடங்கிய சீன வீரர்கள் பின்னர் இந்திய வீரர்களின் பதிலடியை எதிர்கொள்ள முடியாமல் பின் வாங்கினார்கள். அவர்கள் கர்னல் பவால் உத்தரவின் பேரில் ஆற்றை கடக்க தொடங்கினார்கள். பனியால் கடும் குளிர்நிலையில் இருந்த ஆற்றை கடப்பதற்கான கால் சட்டையை கூட அவர்கள் அணியவில்லை.

அப்படியே ஆற்றை கடக்க முயன்றனர். திடீரென ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்தால் பல வீரர்கள் அடித்து செல்லப்பட்டனர். சிலர் காயமடைந்தனர். மொத்தம் 38 வீரர்கள் ஆற்றில் மூழ்கி உயிர் இழந்துள்ளனர். இதன்படி, கல்வான் மோதலில் சீனா தனது 42 வீரர்களை இழந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பஞ்சாபில் ஊடுருவியவர் சுட்டுக்கொலை: பஞ்சாப் மாநிலத்தின் பெரோஸ்பூர் பகுதியில் உள்ள சர்வதேச எல்லை வழியாக நேற்று முன்தினம் மாலை மர்ம நபர் ஒருவர் ஊடுருவ முயன்றார். பாகிஸ்தானின் பகுதியில் இருந்து ஊடுருவ முயன்ற அந்த நபரை திரும்பி செல்லும்படி எல்லைப் பாதுகாப்பு படையினர் எச்சரித்தனர். ஆனால், அந்த நபர் அதனை பொருட்படுத்தாமல் சர்வதேச எல்லைப் பகுதியை நோக்கி மேலும் முன்னேறினார். இதனை தொடர்ந்து  ஊடுருவிய அந்த நபர் மீது வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் அவர் உயிரிழந்தார்.

Tags : China ,Kalwan , China's false exposure kills 42 Chinese soldiers in Kalwan conflict: study article in Australian newspaper
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...