×

5 ஆண்டுகளில் 10,926 வழக்குகள் பதிவு 4 மாதங்களில் 4717 சட்டவிரோத பேனர்கள் அகற்றம்: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

சென்னை: கடந்த 4 மாதங்களில் 4717 சட்டவிரோத பேனர்கள் அகற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சட்டவிரோத பேனர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், சட்டவிரோதமாக பேனர் வைத்தது தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த வழக்குகளின் நிலை என்ன என்பதை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்குகள் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக உள்துறை செயலாளர் சார்பில் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகரின் பதில் மனுவை கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் தாக்கல் செய்தார். அதில், கடந்த 2016ம் ஆண்டு முதல் 2021ம்  ஆண்டு வரை, சட்டவிரோதமாக பேனர்கள் வைத்தது தொடர்பாக 10 ஆயிரத்து 926 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பேனர்கள் அமைப்பதற்கு உரிமம் வழங்குவது தொடர்பான விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர், டிஜிபி, மாவட்ட கலெக்டர்கள், பேரூராட்சி ஆணையர்கள், நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

 கடந்த 2020ம் அக்டோபர் முதல் கடந்த ஜனவரி 31ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 4717 சட்டவிரோத பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன. சென்னையில் 1465 பேனர்களும், பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 2933 பேனர்கள், பேரூராட்சிகளில் 319 பேனர்களும் அகற்றப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அரசுத் தரப்பின் இந்த அறிக்கைகளை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், சட்டவிரோத பேனர்களை அகற்றுவதற்கான செலவை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் 18ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags : Government of Tamil Nadu ,iCourt , 10,926 cases registered in 5 years 4717 illegal banners removed in 4 months: Government of Tamil Nadu informed in iCourt
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...