×

வந்தவாசி அருகே கிராமத்தில் கி.பி. 8ம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவர்கால சிற்பங்கள் மீட்பு

வந்தவாசி: வந்தவாசி அருகே கி.பி. 8ம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவர் கால சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் தலைவர் ராஜ்பன்னீர்செல்வம், உதயராஜா, சரவணன், விஜயன், கிருபாகரன் ஆகியோர், வந்தவாசி அடுத்த தெள்ளார் அருகே உள்ள பென்னாடகரம் கிராமத்தில் அண்மையில் ஆய்வு செய்தனர். அங்குள்ள சிவன் கோயில் மற்றும் ஏரிக்கரை அருகே கி.பி.8ம் நூற்றாண்டு பல்லவர் காலத்தை சேர்ந்த விஷ்ணு, பிள்ளையார், கொற்றவை, தவ்வை ஆகிய 4 சிற்பங்களை கண்ெடடுத்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
பென்னாடகரம் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட விஷ்ணு சிற்பம் 2 காதுகளிலும் அழகான மகர குண்டலங்கள் அணிந்து, நிமிர்ந்த நேர்கொண்ட பார்வையுடன் பெரிய கண்கள், தடித்த உதடுகளும் கொண்டுள்ளது. மேல் வலக்கையில் பிரயோக சக்கரம், மேல் இடக்கையில் சங்கு, கீழ் வலக்கையில் அபய முத்திரை, கீழ் இடக்கையில் கடி முத்திரை, இடையின் மீது வைத்துள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

கழுத்தில் பட்டையான சரப்பளி அலங்கரிக்க, இடது தோளில் இருந்து சரிந்து மார்பின் மீது பரவி, பின்னர் வலது கைக்கு மேல் ஏறும் நிவித முப்புரி நூலுடன் 4 கரங்களிலும் தோள்வளை மற்றும் கைவளைகளுடன் உள்ளது. பிள்ளையார் சிற்பம் பலகை கல்லில் புடைப்பாக காணப்படுகிறது. 4 கரங்களுடன் பத்மாசன கோலத்தில் பருத்த வயிற்றுடன், பீடத்தின் மீது அமர்ந்தவாறு வடிக்கப்பட்டுள்ள இச்சிலை தேய்ந்து காணப்படுகிறது. இதனால் மேல் இருகரங்களில் உள்ள ஆயுதங்களை அடையாளம் காண இயலவில்லை. கீழ் வலது மற்றும் இடது கரங்கள் முறையே அபய முத்திரையும் இடையில் கடி முத்திரையும் காட்டப்பட்டுள்ளது. யானையின் காது மடல்கள் போன்ற பெரிய காதுகளுடன் துதிக்கையை வலப்பக்கமாக சுருட்டி வலம்புரி பிள்ளையாராக காட்சி தருவது சிறப்பாகும். இந்த சிற்பத்தின் காலம் கி.பி. 8ம் நூற்றாண்டின் தொடக்கமாக கருதலாம். கொற்றவை சிற்பம் ஜடா மகுடம் தலையை அலங்கரிக்க, கழுத்தில் கண்டிகை மற்றும் சவடி அணிந்து, தனது அனைத்து கரங்களிலும் தோள்வளை மற்றும் கைவளையுடன் காட்சியளிக்கிறார்.

8 கரங்களில் தனது மேல்வலது கரம் பிரயோக சக்கரம் ஏந்தியும், ஏனைய வலது கரங்கள் முறையே போர் வாள், சூலம் ஏந்திய நிலையிலும், நான்காவது வலக்கரம் அபய முத்திரையிலும், மேல் இடது கரத்தில் சங்கும், ஏனைய கைகள் முறையே குறுவாள், மான் கொம்பு ஏந்திய நிலையிலும், கீழ் இடதுகரம் இடை மீது ஊறு முத்திரை உள்ளது. கொற்றவையின் இடையருகே இருபுறமும் வீரர்களும், இடதுபுறம் கலைமானும், எருமை தலையின் மீது திரிபங்க நிலையில் காட்சி தருகிறது. தலையருகே பெரிய சூலம் உள்ளது. இச்சிற்பத்தில் காணப்படும் ஆயுதங்கள், ஆடை அணிகலன்கள் உள்ளது. தவ்வை சிற்பம் பலகை கல்லில் மாந்தன்-மாந்தியுடன், அவரின் ஆயுதமான துடைப்பம் மற்றும் காக்கை கொடியுடன் அமர்ந்த நிலையில் உள்ளது. உள்ளூர் கலை பாணியில் வடிக்கப்பட்டு உள்ளது. இந்த சிற்பங்களை வைத்து பார்க்கும்போது இந்த ஊரில் பல்லவர் கால கோயில் ஒன்று கால ஓட்டத்தில் அழிந்திருக்கலாம் என அனுமானிக்க முடிகிறது. தொன்மையான இந்த சிற்பங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

Tags : Vandavasi BC , AD in a village near Vandavasi. Restoration of 8th century Pallava sculptures
× RELATED அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக...