×

ஊரடங்கில் வருமானம் தந்த துணிப்பை தயாரிப்பு

நன்றி குங்குமம் தோழி

சிறு தொழில்

கொரோனா வைரஸ் கிருமித் தொற்று ஒட்டுமொத்த உலகத்தையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளது. அனைத்து துறைகளும் அதலபாதாளத்தில் அல்லாடிக் கொண்டிருக்கும் போது சிறு தொழில்களும் அதில் சிதைந்து கிடக்கின்றன. குடிசைத் தொழில்களான ஜாம், ஊறுகாய், ஸ்வீட், மிக்சர்கள், ஜூஸ் எசென்ஸ் போன்ற உடனடி உணவு கலவை பொருட்களின் உற்பத்தி முடங்கியுள்ளதால் இந்த பொருட்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த தொழில்கள் அனுமதிக்கப்பட்டால் தான் முழு அடைப்பு அகற்றப்படும்போது உணவுப் பொருட்கள் கிடைக்கும்.

தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே அமைந்துள்ள பகுதிகளில் செயல்படும் கிராம மற்றும் குடிசைத் தொழில்கள் மெதுவாக பணிகளை தொடங்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது வர்த்தகர்கள் மூலப்பொருட்களை வாங்கத் தொடங்கியுள்ள நிலையில் கிராம மற்றும் குடிசைத் தொழில்கள் சற்று சுவாசிக்க நேரம் கிடைத்துள்ளது தெரிகிறது. இதன்படி வெல்லம், சமையல் எண்ணெய், தீக்குச்சிகள், பனை பொருள் தயாரிப்புகள், மண்பாண்டங்கள், பட்டாசுகள் மற்றும் கைவினைப்பொருட்கள் ஆகியவற்றின் உற்பத்தி நடப்பு வாரத்திலிருந்து மெதுவாக வேகம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில் ஊரடங்கிலும் வருமானம் ஈட்டித்தந்த துணிப்பை தயாரிப்பு தொழில் குறித்து பேசுகிறார் கைவினைப்பொருள் கலைஞர் ஜெயஸ்ரீ  நாராயணன்.
‘‘ஊரடங்கு என்றவுடன் நாம் அனைவரும் மிகவும் பயந்து இனி என்ன நடக்குமோ வெளியில் சென்றால் நமக்கும் கொரோனா வைரஸ் கிருமி தொற்றிக்கொள்ளுமோ என்ற அச்சத்திலேயே பயந்திருந்த நேரத்தில் அது நீட்டிக்கப்பட்டு வீட்டிற்குள்ளேயே அடைபட்டு விட்டோம்.

இந்த ஊரடங்கிலும் குளிர்சாதன பெட்டியில் வைத்து பராமரிக்க ஏதுவாக துணிப்பை தயாரித்துக் கொடுத்தது எனக்கு வருமானத்தை ஈட்டித் தந்தது என்பது சற்று ஆறுதலான விசயம். எல்லோருக்குமான அச்சம்தான் எனக்கும் இருந்தது. ஆனால், அப்படியே இருந்துவிட முடியுமா? என்னாவது வாழ்க்கை என்று சிந்தித்தபோது எனக்குள் இருந்த எதிர்மறை (Negative) எண்ணங்களை எல்லாம் தள்ளிவிட்டு என் விருப்பப்படி நான் எப்போதும் செய்துவரும் துணிப்பைகளில் வண்ணம் தீட்டும் வேலையை ஆரம்பித்தேன். ஏற்கனவே ஆன்லைன் கிளாஸ் மூலமாகவும் ஃபேஸ்புக் மூலமாகவும் எனக்கு இருந்த நண்பர்களுக்கு துணிப்பை தைத்துக்கொடுப்பது பற்றியும், அதில் வண்ணம் தீட்டும் கலை பற்றியும் சொல்லிக்கொடுத்து வந்தேன். அத்துடன் நான் ஏற்கனவே எனது தேவைக்காக செய்து வைத்திருந்த ஃப்ரிட்ஜ்  ( FRIDGE STORAGE BAGS) பைகளை எனது நண்பர்களுடன் பகிர்ந்தபோது அது மிகவும் வரவேற்பைப் பெற்றுத் தந்ததோடு மட்டுமல்லாது, நிறைய ஆர்டர்களும் வரத்தொடங்கியது.

ஒருவரின் வாழ்க்கை எந்த திசையில் அழைத்துச் சென்றாலும் அதை எதிர்கொள்ள ஒருவருக்கு திறமையும் தன்னம்பிக்கையும் மட்டுமே கைகொடுக்கும். அந்த தாரக மந்திரம் தான் இன்று இந்த லாக்டவுன் சமயத்தில் என்னால் வீட்டிலிருந்தபடியே எதைப் பற்றியும் யோசிக்காமல் கடமையே பெரிது என்று எண்ணி என்னிடம் ஏற்கனவே இருந்த துணியைக் கொண்டு நிறைய பைகளை தைத்துக்கொடுக்க செய்தது. ஓரளவுக்கு வருமானமும் கிடைத்தது. இனி ஊரடங்கு முடிந்தவுடன் பைகளை கூரியர் வழியாக அனுப்பி வைக்க உள்ளேன். வெறுமனே பைகளை மட்டுமல்லாது அதில் எனது கைவண்ணத்தையும் காண்பிக்கும் வகையில் வண்ணம் தீட்டிய பைகளாகவும் மாற்றியுள்ளேன்’’ என்றவர், துணிப்பை தயாரிப்பு முறை குறித்து விளக்கினார்.

தேவையான பொருட்கள்

1.  காட்டன் ஃபேப்ரிக் ( Cotton Fabric) அல்லது காதி துணி
2. இன்ச் டேப் ( Inch Tape)
3. பென்சில் ( Pencil)
4. கத்திரிக்கோல் ( Scissor)
5. தையல் மெஷின் ( Sewing Mechine)
6. துணியில் வண்ணம் தீட்டும் பெவிக்ரில் ஃபேப்ரிக் கலர்ஸ்
7. தூரிகை ( Brush)

ஒரு வீட்டில் சுமாராக அரை கிலோ வீதம் காய்கறிகள் வாங்கினால் அதை குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதற்கு ஏற்றவாறு பையின் அமைப்பு பத்துக்கு பன்னிரண்டு இன்ச்செஸ்’’ என்றார். ‘‘வீட்டைவிட்டு வெளியில் வேலைக்குச் செல்ல முடியாத சூழ்நிலையில் இதுபோன்ற சிறு சிறு கைத்தொழில்கள் காலத்திற்கு ஏற்றவாறு உதவியாக இருக்கும் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை. இதற்கு முதலீடு ஆயிரம் ரூபாய்க்கு பருத்தி (Cotton) துணியும் தையல் மெஷினும் பெயின்ட் செய்ய தேவையான வண்ணங்களும் இருந்தாலே போதுமானது.

ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 100 பைகள் தைக்கலாம். எந்தெந்த பைகளில் எந்தெந்த காய், கனிகளை வைக்கிறோமோ அந்தந்த காய்கறி, பழங்களின் படங்களை அப்படியே பெயின்ட் செய்தால் நம் வீட்டு குழந்தைகளை விட்டே அதனை குளிர்சாதன பெட்டியிலிருந்து எடுத்துத் தரவும் செய்யலாம். அயல் நாட்டிலிருக்கும் நம் ஊர் மக்களும் நம் நண்பர்களும் இதனை மிகவும் விரும்பி வாங்கி வருகிறார்கள். பிளாஸ்டிக்கைத் தவிர்த்து சுற்றுப்புற சூழலைப் பாதுகாக்கும் வகையில் இதுமாதிரியான வண்ணம் தீட்டிய (Painted Bags) பைகள் பல செய்து நம் வருவாயை பெருக்கிக்கொள்ளலாமே’’ என்றார் ஜெயஸ்ரீ நாராயணன்.

தொகுப்பு: தோ.திருத்துவராஜ்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!