×

முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாமல் அணையை ஆய்வு செய்யக்கூடாது: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு

டெல்லி: முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாமல் அணையை ஆய்வு செய்யக்கூடாது என தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது. ஜூன் மாதம் பருவமழை தொடங்கும் முன் பராமரிப்பு பணிகளை முடிக்க வேண்டும். பராமரிப்பு பணிகளுக்கு கேரள அரசு ஒத்துழைக்கும் படி கேரளா அரசுக்கு உத்தரவிட தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது.

முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாமல் அணையை ஆய்வு செய்யக்கூடாது என ஒன்றிய அரசு தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில்பதில் மனு கூறப்பட்டுள்ளது. முல்லைப்பெரியாறு பிரச்னை என்பது தமிழகம் - கேரளா இடையே பல ஆண்டுகாலமாக நிலவி வருகிறது. உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் மூலம் பெறப்பட்ட அனுமதியின் மூலம்  தமிழகம் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தியது.


ஆனால் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து குறைக்க வேண்டும் என வழக்குகளை தொடர்ந்த வண்ணம் உள்ளது. இது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒன்றிய நீர்வளத்துறை ஆணையம் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவில், தற்போது உள்ள முல்லை பெரியாறு அணை உறுதியாக உள்ளது. அதனை இடிக்க வேண்டாம் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அணையில் சிரத்தத்ன்மையை ஆய்வு செய்வது வழக்கம், அதன்படி ஆய்வு மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவிற்கு தான் தற்போது தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. தற்போதைய சூழலில் பராமரிப்பு பணியை மேற்ற்கொள்ள முடியாத நிலை உள்ளது. பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள கேரள அரசு ஒத்துழைப்பு தர மறுத்துள்ளது. குறிப்பாக முல்லை பெரியாறு அணையை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் மரங்கள் உள்ளது, அதனை வெட்டுவதற்க்கோ, அல்லது சாலைகளை செப்பணிடவோ கேரள அரசு அனுமதி வழங்க மறுத்துள்ளது.

அதுமட்டுமின்றி முல்லை பெரியாறு அணையின் பல்வேறு பகுதிகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியாத ஒரு சூழல் உள்ளது. எனவே இந்த பராமரிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்த பிறகுதான் ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும், இந்த பராமரிப்பு பணிகள் ஜூன் மாதத்திற்கு முன்பு முடிக்கப்பட வேண்டும். அதற்க்கு கேரள அரசு தமிழக அதிகாரிகளை அனுமதிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும். பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை அணையில் ஆய்வு மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என கோரி தமிழக அரசு தனது பதில்மனுவை தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவானது அடுத்த வாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Tags : Mullaperiyaru Dam ,Supreme Court , Mulla Periyaru Dam, Maintenance Work, Supreme Court, Government of Tamil Nadu Petition
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு