×

கணவரை அபகரித்து ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டல் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆசிரியை தர்ணா

கோவை: சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலை சேர்ந்தவர் ஜெயந்தி (40). பள்ளியில் இந்தி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர், நேற்று காலை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.  போலீசார் அவரை அழைத்து பேசி புகார் மனுவை பெற்றனர். அப்போது அவர் கூறியதாவது: கடந்த 2005ம் ஆண்டு நானும், தென்காசியை சேர்ந்த பிரதீப் குமார் (44) என்பவரும் பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு தற்போது 16 வயதில் மகன் உள்ளார். எனது கணவர் கோவையில் பிளக்ஸ் பிரிண்டிங் நிறுவனம் வைத்து நடத்தி வந்தார். நான் கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இந்தி ஆசிரியையாக வேலை செய்து வந்தேன். இந்நிலையில் எனது கணவருக்கும், கோவையை சேர்ந்த 42 வயதான பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண் எனது கணவரை மிரட்டி அழைத்து சென்றார்.

பின்னர், இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். நான் எனது கணவரை தொடர்பு கொண்ட போது அவர் என்னுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை எனக்கூறி விட்டார். அப்போது உடன் இருந்த அந்த பெண், உனது கணவர் வேண்டும் என்றால் 15 லட்சம் ரூபாய் மற்றும் ஒரு கார் தரவேண்டும். பணம், கார் கொடுத்து விட்டு உன் கணவரை அழைத்து செல்லலாம் என என்னிடம் கூறினார். அவரது மிரட்டலால் நான் பயந்து விட்டேன்.  நானும், எனது மகனும் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழலில் வசித்து வருகிறோம். இதுகுறித்து நான் விருதுநகர், சிவகாசி, காந்திபுரம், சிங்காநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது, கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தேன். கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்குமாறு கூறினர். பலமுறை புகார் அளித்து நான் விரக்தியில் உள்ளேன்.  என் கணவரை மீட்டு தருவார்கள் என எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Tharna , Kidnapping her husband and threatening her for Rs 15 lakh Tarna the teacher in the office of the Commissioner of Police
× RELATED தமிழ்நாடு வங்கி உருவாக்க கோரி புதுகையில் தர்ணா போராட்டம்