×

சீர்காழி அருகே நாங்கூரில் கருட சேவை உற்சவத்தில் 11 பெருமாள்கள் சங்கமம்: திரளான பக்தர்கள் தரிசனம்

சீர்காழி:சீர்காழி அடுத்த நாங்கூரில் கருடசேவை உற்சவத்தில் ஒரே இடத்தில் 11 பெருமாள்களும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி சேவை சாதித்தனர். இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே நாங்கூரில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 11 திவ்ய தேசகோயில்கள் ஓரே பகுதியில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் தை மாதத்தில் கருடசேவை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான கருடசேவை உற்சவம் நேற்று இரவு விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி அப் பகுதியில் உள்ள நாராயண பெருமாள், குடமாடுகூத்தர், செம்பொன்னரங்கர், பள்ளிகொண்ட பெருமாள், அண்ணன் பெருமாள், புருஷோத்தம்மன் பெருமாள், வரதராஜன் பொருமாள், வைகுந்தநாதன் பெருமாள், மாதவன் பெருமாள், பார்த்தசாரதி பெருமாள், கோபாலன் பெருமாள் ஆகிய 11 பெருமாள்களும் நாங்கூர் மணிமாட கோயில் முன்பு எழுந்தருளி பின்பு இரவு 12 மணியளவில் மணவாள மாமூனிகள், திருமங்கை ஆழ்வார் ஹம்ச வாகனத்தில் எழுந்தருளினர்.

தொடர்ந்து பெருமாள்களை பற்றி பாடிய பாடல்களை பட்டாச்சாரியர்கள் மற்றும் பக்தர்களால் பாடப்பெற்று மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் தங்க கருடவாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய 11 பெருமாள்களுக்கும், ஆழ்வாருக்கும், மாமூனிக்கும் ஒரேநேரத்தில் பாசுரங்கள் பாடி மகாதீபாராதனை நடைபெற்றது. பின்பு 11 பெருமாள்களும் அணிவகுத்து மேளதாளங்கள் முழங்க, வாணவேடிக்கையுடன் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது திரளான பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் செய்திருந்தனர். விழாவையொட்டி சீர்காழி டிஎஸ்பி லாமேக் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags : Karuta Seva Utsavam ,Nangur ,Sirkazhi , 11 Perumals Sangamam at Karuta Seva Utsavam in Nangur near Sirkazhi: Darshan by a large number of devotees
× RELATED சீர்காழியில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்..!!