×

திருச்செந்தூர் மார்க்கமும் வெறிச்சோடி கிடக்கிறது நெல்லை - செங்கோட்டைக்கு 4 ஜோடி பயணிகள் ரயில்கள் இயக்கப்படுமா?: தெற்கு ரயில்வேக்கு 300க்கும் மேற்பட்டோர் கடிதம்

நெல்லை: நெல்லை - செங்கோட்டை வழித்தடத்தில் முன்பு போல் 4 ஜோடி பயணிகள் ரயில்களை இயக்கிட வேண்டும் என பயணிகள் விரும்புகின்றனர். இதற்காக தெற்கு ரயில்வேக்கு பயணிகள் சார்பில் 300க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன.
மதுரைக்கு அடுத்து தென்மாவட்டங்களில் மிகப்பெரிய நகரமான நெல்லைக்கு, பணி நிமித்தமாக பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் வந்து செல்கின்றனர். இவர்கள் நெல்லையில் இறங்கி தென்காசி, திருச்செந்தூர் செல்ல பாசஞ்சர் ரயில்கள் வசதியாக இருந்தன. மேலும் அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் நெல்லை வந்து செல்லவும் பாசஞ்சர் ரயில்களின் பங்களிப்பு அதிகமாக இருந்தது.

செங்கோட்டை - நெல்லை பாசஞ்சர் ரயிலை பயன்படுத்தி, தென்காசி, அம்பை, கடையம், பாவூர்சத்திரம் பயணிகள் அதிகளவில் நெல்லைக்கு வந்து சேர்ந்தனர். இந்ததடத்தில் உள்ள ஆயிரக்கணக்கானோர் நெல்லையில் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவ வசதிக்காக வந்து சென்றனர். கொரோனா ஊரடங்குக்கு முன்பு வரை செங்கோட்டை - நெல்லை வழித்தடத்தில் 4 ஜோடி பயணிகள் ரயில்கள் இரு மார்க்கங்களிலும் இயக்கப்பட்டு வந்தன.  ஊரடங்கிற்கு பின்னர் அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது காலையில் நெல்லையில் இருந்து செங்கோட்டை செல்லும் ரயில் மட்டும் இயக்கத்தில் உள்ளது. மறு மார்க்கத்தில் மாலையில் செங்கோட்டையில் இருந்து நெல்லை செல்லும் ரயில் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் காலை வேளைகளில் நெல்லையை நோக்கி வருவோருக்கு சாலை மார்க்கமானது மிகவும் கடினமாக உள்ளது.

தென்காசி- நெல்லை சாலை விரிவாக்கம் செய்யப்படுவதால், சாலை பயணங்களுக்கு கூடுதல் நேரம் செலவாகிறது. எனவே செங்கோட்டை- நெல்லை மார்க்கத்தில் முன்பு போல 4 ஜோடி ரயில்களை இயக்கிட வேண்டும் என பயணிகள் விரும்புகின்றனர். இதற்காக தெற்கு ரயில்வேக்கு பயணிகள் சார்பில் 300க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் மூலமாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளன.இதுகுறித்து தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தை சேர்ந்த பாண்டியராஜா  கூறுகையில், ‘‘செங்கோட்டை- நெல்லை பயணிகள் ரயில் காலை நேரத்தில் எப்போதும் பொதுமக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும். ரயிலில் பயண கட்டணம் குறைவு என்பதால் சாதாரண, நடுத்தர மக்கள் பாசஞ்சர் ரயில்களை விரும்புகின்றனர். மேலும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் காலை நேரத்தில் ரயில்களில் வரும்போது, காலை நேர உணவை அருந்தவும் வசதிகள் உள்ளன. எனவே இம்மார்க்கத்தில் 4 ஜோடி ரயில்களையும் உடனடியாக இயக்க வேண்டும்’’ என்றார்.

வாரியத்தின் ஒப்புதலுக்கு காத்திருப்பு
செங்ேகாட்டை- நெல்லை பாசஞ்சர் ரயில்களை முழுவீச்சில் இயக்கக் கோரி நெல்லை, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பயணிகள் தென்னக ரயில்வே அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பி வருகின்றனர். தெற்கு ரயில்வே அதற்கு ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக பதில் அளித்து வருகிறது. இதேபோல் நெல்லை- திருச்செந்தூர் வழித்தடமும் 2 ஆண்டுகளாக வெறிச்சோடி கிடக்கிறது. இம்மார்க்கத்திலும் ஒரு ஜோடி ரயில்கள் மட்டுமே இயக்கப்படும் நிலையில், முன்பு போல் 4 ஜோடி ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என பயணிகள் விரும்புகின்றனர்.

Tags : Thiruchendur route ,Nellai - Will ,Red Fort ,Southern Railway , The Thiruchendur road is also deserted Will 4 pairs of passenger trains run to Nellai-Red Fort ?: More than 300 letters to Southern Railway
× RELATED அடுத்தது செங்கோட்டையனா? எஸ்.பி...