திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டையில் பறக்கும் படை சோதனை; ரூ.58.35 லட்சம் பறிமுதல்

திருச்சி: திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டையில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் நடத்திய சோதனையில், 58 லட்ச ரூபாய் சிக்கியது. திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் பகுதியில் பறக்கும்படை அலுவலர் உமாராணி தலைமையில் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த முட்டை லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சத்து 85 ஆயிரத்தை தேர்தல்  பறக்கும் படையினர் பறிமுதல் செய்து முசிறி ஆர்டிஓ மாதவனிடம் ஒப்படைத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் சுசிலா தலைமையிலான போலீசார் வாகன சோதனை நடத்தி, லோடு ஆட்டோவை மறித்து சோதனை செய்தனர்.

இதில் ஆவணங்களின்றி கொண்டு வந்த ரூ.1.61 லட்சத்தை  பறிமுதல் செய்து ஆலங்குடி கருவூலத்தில் ஒப்படைத்தனர். பெரம்பலூர் மாவட்டம் பாளையம் பஸ் ஸ்டாப்பில் தேர்தல் பறக்கும்படை அதிகாரி பழனிசெல்வம் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தி, ஒரு வாகனத்தை ஓட்டிவந்த வேலுசாமி என்பவரிடம் இருந்து ரூ.53 லட்சத்தை  பறிமுதல் செய்து குரும்பலூர் பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரான மெர்ஸியிடம்  ஒப்படைத்தனர். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சிவக்கொல்லை பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சாந்தகுமார் தலைமையில் போலீசார் நடத்திய வாகன சோதனையில், தஞ்சாவூரில் இருந்து மல்லிப்பட்டினம் நோக்கி சென்ற ஒரு சரக்கு வாகனத்தில் உரிய ஆவணமின்றி எடுத்து சென்றதாக டிரைவர் வாசிம்அக்ரமிடம் இருந்து ரூ.1,89,600 பறிமுதல் செய்தனர்.

Related Stories: