×

கீழ்பென்னாத்தூர் அருகே தேசிங்கு ராஜா வழிபட்ட கோயிலில் பட்டத்து யானை கல்வெட்டு கண்டெடுப்பு: 10ம் நூற்றாண்டை சேர்ந்தது

கீழ்பென்னாத்தூர்: கீழ்பென்னாத்தூர் அடுத்த மேக்களூர் கிராமத்தில் உள்ள தேசிங்கு ராஜா வழிபட்ட நவநீத கோபால கிருஷ்ணன் கோயிலில் 10ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட மேக்களூர் கிராமத்தில் பழமைவாய்ந்த நவநீத கோபால கிருஷ்ணன் கோயில் உள்ளது. அதே கிராமத்தை சேர்ந்த மதன்மோகன், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த ச.பாலமுருகன், பழனிசாமி, மதன்மோகன், சுதாகர் மற்றும் தர் ஆகியோர் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள மேக்களூர் நவநீத கோபால கிருஷ்ணன் திருக்கோயிலில் யானையின் நினைவாக வைக்கப்பட்ட சிற்பமும், கல்வெட்டும், சம்புவராயர் காலகல்வெட்டும் கண்டறிந்தனர்.

மேக்களூர் கோயிலில் உள்ள யானைச்சிற்பம் 4 அடி உயரமும், 2 அடி அகலமும் உள்ள கல்லின் மேல் பகுதியில் பாதி வட்டமாகவும் கீழ்ப்பகுதி நீளமாகவும் உள்ளது. மேல் பகுதியில் உள்ள வட்டத்தில் யானையின் உருவம் தனது தும்பிக்கையை மடக்கிய நிலையில் பொறிக்கப்பட்டுள்ளது. யானையின் மேற்பகுதியில் இலட்சனைப்போல் கல்லின் அமைப்பு உள்ளது. கல்லில் உள்ள யானையின் கீழ் யானை பெயர் ‘நீலகண்டரையன்’ என தனியாக ஒரு வரியில் கோடிட்டு எழுதப்பட்டுள்ளது. இதற்கு கீழ் நான்கு வரியிலும் மொத்தம் ஐந்து வரியில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டை படித்தளித்த கல்வெட்டு அறிஞர் சு.ராஜகோபால் கூறுகையில், ‘இந்த யானை சிற்பத்தின் கீழ் உள்ள கல்வெட்டில், புத்தன் புவந திவாகரன் என்பவர் இந்தப்பட்டத்து யானைக்கு நீலகண்டரையன் என்று பெயர் கொடுத்துள்ளார். இது 10ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகலாம். யானையின் உருவம் பொறித்து அதன் கீழ் நீலகண்ணரையன் என்று சிறப்பாக எழுதப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டார்.

மேக்களூர் கிராமத்தில் கிடைத்திருக்கும் இது அரிய வகை கல்வெட்டாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.கீக்களூர் சிவன் கோயில் கருவறையில் பிற்புறம் உள்ள சுவரில் ‘13ம் நூற்றாண்டைச் சேர்ந்த ராஜநாராயண சம்புவராயரின்’ 2 நில தானக்கல்வெட்டுகள் உள்ளன. இந்த கல்வெட்டு இவ்வூரை பாக்கப்பற்றில் உள்ளதென்றும் இவ்வூர் கோயில் இறைவன் பெயரை விக்கிரம சோளிஸ்வர முடையநாயனார் என்றும் குறிப்பிடுகிறது. இந்த கல்வெட்டில் பாக்கப்பற்று நாட்டு ஊரவர்கள் கோயிலுக்கு நிலம் மற்றும் கோயில் பூசைக்கான ஏற்பாடுகளைச் கூறும் தகவல்கள் கல்வெட்டில் வெட்டப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகள் சிமென்ட் பூச்சுகளால் முழுமையற்று உள்ளன. இவ்வாறு வரலாற்று ஆய்வு நடுவத்தினர் தெரிவித்தனர்.

கல்வெட்டில் உள்ள பதிவுகள்
1. நீலகண்டரையன்
2. ஸ்வஸி புத்
3. தன் புதவந்திவாக
4. ரன் பேர் இவானை
5. பேரிட்டான் நீ.... என கல்வெட்டு முடிகிறது.
யானைகளுக்கு எடுக்கப்படும் நினைவுக்கல் புத்தன் புவந திவாகரன் என்பவர் இந்தப் பட்டத்து யானைக்கு நீலகண்டரையன் என்று பெயர் கொடுத்துள்ளான். இது 10ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். யானையின் உருவம் பொறித்து அதன் கீழ் நீலகண்டரையன் என்று சிறப்பாக எழுதப்பட்டுள்ளது.  இதுபோன்ற அமைப்பில் ஏற்கனவே திருநாவலூரில் ஒரு யானையும் பூதகன் உருவம் பொறித்து அதன் கீழ் பல்லவர் கிரந்த எழுத்தில் கலிநாரை என்று பொறிக்கப்பட்டுள்ளது. கூகையூரிலும் ஒரு சமஸ்கிருதச் சுலோகத்துடன் இதுபோன்ற அமைப்பில் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. இவைகள் யானைகளுக்கும்-பட்டத்து யானைகளுக்கும் எடுக்கப்படும் நினைவுக்கல் என  தொல்லியல் அறிஞர் ராஜகோபால்  தெரிவித்துள்ளார்.

Tags : King Desingu ,Lower Pennathur , In the temple where King Desingu was worshiped near Lower Pennathur Discovery of the title elephant inscription: 10th century
× RELATED கீழ்பென்னாத்தூர் வெறையூரில் மத்திய...