×

சாலையோர ஆக்கிரமிப்பு கச்சிராயபாளையத்தில் தொடரும் போக்குவரத்து நெரிசல்

சின்னசேலம்: வடக்கநந்தல் பேரூராட்சி கச்சிராயபாளையத்திற்கு கள்ளக்குறிச்சி, சின்னசேலம், பெரம்பலூர், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து பஸ் போக்குவரத்து உள்ளது. மேலும் கல்லூரி மற்றும் பள்ளி பேருந்துகளும் கச்சிராயபாளையம் வழியாக வந்து செல்கின்றன. இந்த நிலையில் அக்கராயபாளையம் மும்முனை சந்திப்பில் இருந்து பஸ் நிலையம்வரை அதிக அளவில் தனிநபர் ஆக்கிரமிப்புகள் உள்ளது. மேலும் பகல் நேரத்திலேயே சரக்கு வாகனங்களும் சாலையை ஆக்கிரமித்து நிற்கிறது.இதனால் பஸ் மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் சமூக ஆர்வலர்கள் பலமுறை மனு கொடுத்தும், மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல் துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கச்சிராயபாளையம் சாலையில் போக்குவரத்து நெரிசல் தொடர் கதையாகி வருகிறது.

ஆகையால் வருவாய்த்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக கச்சிராயபாளையம் சாலையை ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு இருக்கும்பட்சத்தில் உரிய அளவீடு செய்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். அதைப்போல காவல் துறையினரும் காலை மற்றும் மாலை நேரங்களில் அக்கராயபாளையம் முதல் கச்சிராயபாளையம் பஸ்நிலையம்வரை ரோந்து பணியில் ஈடுபட்டு போக்குவரத்து நெரிசலை சரிசெய்வதுடன், சாலையில் நிற்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


Tags : Kachirayapalayam , Continuing traffic congestion in roadside occupation Kachirayapalayam
× RELATED கச்சிராயபாளையம் அருகே நள்ளிரவு கூரை...