×

4 அல்ல 41 பேர் பலி... கல்வான் மோதலில் உயிரிழப்பை சீனா குறைத்து கூறியதாக ஆஸி. புலனாய்வு இதழ் செய்தி வெளியீடு

சிட்னி : கல்வான் மோதலில் சீன தரப்பில் வீரர்களின் உயிரிழப்பை அந்நாட்டு அரசு மிகவும் குறைத்து வெளியிட்டு இருப்பதாக ஆஸ்திரேலியா செய்தி நிறுவனம் ஒன்று கூறியுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதி, லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியாவும் சீனாவும் பயங்கரமாக மோதிக் கொண்டனர். இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். தங்கள் தரப்பில் உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்று முதலில் சீனா தெரிவித்தது. பிறகு 2021ம் ஆண்டு வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலில் 4 பேர் மட்டும் சீன தரப்பில் இருந்து உயிரிழந்ததாக கூறப்பட்டது.

இந்த விவகாரத்தில் சீனா உண்மையை மறைத்ததாக பல்வேறு தரப்பிலும் சந்தேகம் எழுந்த நிலையில், கல்வான் மோதலில் சீன வீரர்களின் உயிரிழப்பு அதிகம் என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலியாவின் பிரபல புலனாய்வு நாளிதழ் தி கிளாக்ஸன் கல்வான் மோதல் பற்றிய புதிய கட்டுரை ஒன்றை வெளியிட்டது. அதில் கல்வான் மோதலில் சீன தரப்பில் அந்நாடு அரசு கூறியதை விட அதிக உயிரிழப்பு ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோதலில் படுகாயம் அடைந்தும் தாக்குதலுக்கு அஞ்சி தப்பி ஓடிய போது ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் 41 வீரர்கள் உயிரிழந்து இருக்கலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags : Aussie ,China ,Kalwan , Kalwan, Conflict, Ladakh, Australia, China
× RELATED மோடி அரசு தரும் நெருக்கடி:...