×

ஐசிசி யு19 உலக கோப்பை பைனலில் இங்கிலாந்து: 24 ஆண்டுக்கு பிறகு தகுதி; ஆப்கான் ஏமாற்றம்

நார்த் சவுண்ட்: ஐசிசி யு19 உலக கோப்பை  ஒருநாள் போட்டித் தொடரின் பைனலில் விளையாட, இங்கிலாந்து அணி 24 ஆண்டுகளுக்கு பிறகு தகுதி பெற்றுள்ளது. வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வரும் இத்தொடரின் முதல் அரையிறுதியில் இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. மழை காரணமாக ஆட்டம்  தாமதமாகத் தொடங்கியது. டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து 47 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 231 ரன் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. தொடக்க வீரர் ஜார்ஜ் தாமஸ் 50 ரன் (69 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), ஜார்ஜ் பெல் 56* ரன் (67 பந்து, 6 பவுண்டரி), அலெக்ஸ் ஹார்டன் 53* ரன் (36 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினர். ஆப்கான் பந்துவீச்சில் நவீட்ன் ஸத்ரன், நூர் அகமது தலா 2, கரோடே, இஸருல்லா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, டி/எல் விதிப்படி ஆப்கானிஸ்தான் 47 ஓவரில் 231 ரன் எடுத்தால் வெற்றி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

கரோடே, இஷாக் இருவரும் துரத்தலை தொடங்கினர். கரோடே டக் அவுட்டாகி வெளியேற, இஷாக் - அல்லா நூர் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 93 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். இஷாக் 43 ரன் எடுத்து (65 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) ரன் அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் சுலைமான் சபி டக் அவுட்டானார். அதிரடியாக அரை சதம் அடித்த நூர் 60 ரன் (87 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி வெளியேற, ஆப்கானிஸ்தான் சரிவை சந்தித்தது. எனினும், அப்துல் ஹாடி - பிலால் அகமது இணை 5வது விக்கெட்டுக்கு 50 ரன் சேர்க்க, ஆட்டம் ஆப்கான் பக்கம் திரும்பியது. இந்த நிலையில், பிலால் 33 ரன், இஜாஸ் அகமது 4 ரன்னில் ஆட்டமிழக்க, மீண்டும் இங்கிலாந்து கை ஓங்கியது. ஹாடி ஒரு முனையில் நங்கூரம் பாய்ச்சி நிற்க, நூர் அகமது 20 பந்தில் 25 ரன் விளாசி பரபரப்பை ஏற்படுத்தினார். கடைசி 2 ஓவரில் 19 ரன் தேவைப்பட்ட நிலையில், ரெஹான் அகமது வீசிய 46வது ஓவரின் முதல் பந்தில் நூர் விக்கெட்டை பறிகொடுத்தார். 4வது மற்றும் 5வது பந்தில் இஷருல்லா, பிலால் சமி டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர்.

அந்த ஓவரில் 1 ரன் மட்டுமே கிடைக்க, 3 விக்கெட் பறிபோனது. இதனால் கடைசி ஓவரில் 18 ரன் தேவைப்பட, ஆப்கான் வீரர்களால் 2 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த அணி 47 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 215 ரன் எடுத்து 15 ரன் வித்தியாசத்தில் தோற்றது (4 பேர் டக் அவுட்). ஹாடி 37 ரன், நவீத் ஸத்ரன் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் ரெஹான் அகமது 4, ஆஸ்பின்வால் 2, பிரெஸ்ட், பாய்டன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இங்கிலாந்து 24 ஆண்டுகளுக்கு பிறகு யு19 உலக கோப்பை பைனலுக்கு முன்னேறியுள்ளது. முன்னதாக, 1998ல் பைனலில் விளையாடிய அந்த அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பையையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Tags : England ,ICC U19 World Cup Final , England in ICC U19 World Cup Final: Qualifying after 24 years; Afghan disappointment
× RELATED விசா நடைமுறை விதி மீறல்; இங்கிலாந்தில் 12 இந்தியர்கள் கைது