×

பிரபல நடிகை பலாத்கார வழக்கு விசாரணையை முடிக்க போலீசுக்கு மேலும் ஒரு மாதம் அவகாசம்: புதிதாக 5 பேரை விசாரிக்க அனுமதி

திருவனந்தபுரம்: கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கு விசாரணை, கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த மாத இறுதிக்குள் விசாரணையை முடிக்க ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையே புதிய சாட்சிகள் உள்பட 8 பேரை மீண்டும் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் 5 பேரிடம் மட்டும் விசாரணை நடந்த அனுமதி அளித்தது. இந்த சாட்சிகளிடம் விசாரணை நடத்த 6 மாதம் கால அவகாசம் வேண்டும் என்று கூறி, போலீசார் விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதை விசாரித்த நீதிமன்றம் ஒரு மாதத்திற்குள் விசாரணையை முடித்து அறிக்கையை தாக்கல் செய்ய போலீசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே நடிகர் திலீப் உள்பட 3 பேர் நீதிமன்றத்தில் அளித்த 6 செல்போன்களை ஆலுவா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும், போலீசுக்கு தேவைப்பட்டால் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து போன்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் கேரள உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதையடுத்து  6 செல்போன்களையும் தங்களிடம் ஒப்படைக்கக் கோரி ஆலுவா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விரைவில் மனு தாக்கல் செய்ய கொச்சி குற்றப்பிரிவு போலீசார்  தீர்மானித்துள்ளனர். ஆனால் குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்க திலீப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.                 

இதனால் செல்போன்களை பரிசோதனைக்காக மாஜிஸ்திரேட் நீதிமன்றமே நேரடியாக அரசு அங்கீகரித்துள்ள ஏதாவது ஒரு பரிசோதனை கூடத்திற்கு அனுப்ப உத்தரவிடும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே திலீப் கடந்த ஆண்டு ஜனவரி 23 முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை பயன்படுத்திய ஐ போனை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவில்லை என்று குற்றப்பிரிவு போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். 221 நாட்கள் திலீப் பயன்படுத்திய அந்த போனில் இருந்து 2075 அழைப்புகள் சென்றுள்ளன என்றும், போலீசார் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளனர். ஆனால் அப்படி ஒரு போனை தான் பயன்படுத்தவே இல்லை என்று திலீப் நீதிமன்றத்தில் கூறி  உள்ளார். இதற்கிடையே திலீப் உட்பட 5 பேரும் தாக்கல் செய்த முன் ஜமீன் மனுக்கள் இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Tags : Police have one more month to complete the investigation into the famous actress' rape case: Permission to investigate 5 new people.
× RELATED போஜ்புரி நடிகை தூக்கிட்டு தற்கொலை: வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் அதிர்ச்சி தகவல்