×

உ.பி-யில் தேர்தல் பிரசாரத்தின் போது கன்னையா குமார் மீது ஆசிட் வீச்சு?.. காங். தொண்டர்கள் இருவர் காயம்

லக்னோ: சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த கன்னையா குமார் மீது லக்னோவில் ஆசிட் வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
டெல்லி நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவரும், சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தவருமான கன்னையா குமார், லக்னோவில் உள்ள உத்தரபிரதேச காங்கிரஸ் தலைமையகத்திற்கு சென்றார். அவர் சென்ற பாதையில் மர்ம நபர் ஒருவர் அவர் மீது ஆசிட் வீசினார். அப்போது அருகில் இருந்த இருவர் மீது ஆசிட் பட்டதால், அவர்களுக்கு கண் எரிச்சல், அரிப்பு ஏற்பட்டது.

அதிர்ஷ்டவசமாக கன்னையா குமார் உயிர் தப்பியதாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர். பின்னர், ஆசிட் வீசிய மர்ம நபரை காங்கிரஸ் தொண்டர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து ஹஸ்ரத்கஞ்ச் காவல் உதவி ஆணையர் அகிலேஷ் சிங் கூறுகையில், ‘தேர்தல் பிரசாரத்திற்காக லக்னோ வந்த கன்னையா குமாருக்கு எதிராக, இப்பகுதி இளைஞர்கள் கோஷமிட்டு வந்தனர். அவர்களில் ஒருவனான தேவன்ஷ் பாஜ்பாய் என்பவன், கன்னையா குமார் மீது ‘மை’யை வீசியுள்ளான்.

அது மற்றவர்கள் மீதும் பட்டுள்ளது. அவன் வீசியது ஆசிட்டா? என்பது குறித்து விசாரித்து வருகிறோம். கன்னையா குமாரை காப்பாற்ற முயன்ற இருவரில் ஒருவரின் கண்ணில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றம்சாட்டப்பட்ட தேவன்ஜ் பாஸ்பாய் எந்தவொரு அரசியல் அமைப்பையும் சேர்ந்தவர் அல்ல, மலிஹாபாத் கல்லூரியில் எல்எல்பி படித்து வருகிறார்’ என்றார்.

இச்சம்பவம் குறித்து கன்னையா குமார் கூறுகையில், ‘சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் ஆங்கிலேயர்கள் இந்தியர்களிடம் நடந்து கொண்டதை போன்று பாஜகவினர் நடந்து கொள்கின்றனர். ஆங்கிலேயர்களை அவர்களின் நாட்டிற்கு திருப்பி அனுப்பியது போல், காங்கிரஸ் அவர்களை (பாஜக) வெளியேற்றும்’ என்றார். இருந்தும் ஆசிட் வீச்சு சம்பவம் குறித்து அவர் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

Tags : Kannaya Kumar ,P. Kong , Acid attack on Kannaiya Kumar during election campaign in UP? .. Cong. Two of the volunteers were injured
× RELATED வட கிழக்கு டெல்லியில் கன்னையா குமார் போட்டி: காங். அறிவிப்பு