×

3 அமைச்சர், 10 எம்எல்ஏக்கள் விலகிய நிலையில் உ.பி பாஜகவில் மேலும் ஒரு அமைச்சர் விலகல்?.. கணவன் - மனைவி பிரச்னையால் சீட் மறுப்பு

லக்னோ: உத்தரபிரதேச பாஜகவில் 3 அமைச்சர்கள், 10 எம்எல்ஏக்கள் விலகியநிலையில் மேலும் ஒரு பெண் அமைச்சர் விலக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு, கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப சண்டை காரணம் என்று கூறப்படுகிறது. உத்தரபிரதேச தேர்தலில் சமாஜ்வாதி கட்சியும் லக்னோ மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து தொகுதிக்கும் தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ஆனால் சரோஜினி நகர் தொகுதிக்கு இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை.

இந்த தொகுதியில் பாஜக சிட்டிங் எம்எல்ஏவும், மாநில அமைச்சருமான ஸ்வாதி சிங்கிற்கு சீட் மறுக்கப்பட்டதால், அமலாக்கத்துறை முன்னாள் இணை இயக்குனர் ராஜேஷ்வர் சிங் களம் இறக்கப்பட்டுள்ளார். பாஜகவின் இந்த முடிவால், அமைச்சர் ஸ்வாதி சிங் கோபமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, ஸ்வாதி சிங்கின் கணவரான தயாசங்கர் சிங், வேட்பாளர் ராஜேஷ்வர் சிங்கை வெற்றி பெறச் செய்ய பாடுபடுவேன் என்று கூறியுள்ளார். தனது கணவரின் அறிவிப்பு குறித்து ஸ்வாதி சிங் தரப்பில் இதுவரை எவ்வித பதிலும் அளிக்கப்பட வில்லை.

 ஏற்கனவே, ஸ்வாதி சிங்கிற்கும், அவரது கணவர் தயாசங்கர் சிங்கிற்கும் மோதல் இருந்து வரும் நிலையில், தற்போது சீட்டும் மறுக்கப்பட்டதால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. மேலும், ஸ்வாதி சிங்கிற்கு மீண்டும் சீட் வழங்கக் கூடாது என்பதில், அவரது கணவர் தயாசங்கர் சிங் பாஜக தலைமையிடம் காய்களை நகர்த்தி வந்தார். அதனால்தான், தனது மனைவிக்கு எதிராக நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபடப் போவதாக தயாசங்கர் சிங் கூறியுள்ளார்.

தனக்கு சீட் வழங்காததால் அதிருப்தி அடைந்துள்ள ஸ்வாதி சிங், சமாஜ்வாதி கட்சிக்கு தாவ உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பாஜக அமைச்சர்கள் 3 பேர், 10க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளுக்கு சென்றுவிட்டனர். தற்போது மற்றொரு அமைச்சர் பாஜகவில் இருந்து வெளியேறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : U. ,B Bajhaka , 3 ministers, 10 MLAs resign, another minister resigns in UP BJP?
× RELATED வாக்களிப்பின் ரகசியமெல்லாம் போயே...