×

வேட்புமனு தாக்கல் நாளை மறுதினம் நிறைவு தேர்தல் களம் சூடுபிடித்தது: 8 அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளதால் பரபரப்பு

சென்னை: தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த 30ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் நாளை மறுதினம் (4ம் தேதி) முடிவடைகிறது. 8 அரசியல் கட்சிள் வேட்பாளர்களை அறிவித்துள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டு முதல் தொடர்ந்து 6 ஆண்டுகள் அதிமுக ஆட்சியால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், கடந்த மே மாதம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தது. முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். இதையடுத்து தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. அதன்படி கடந்த 2 மாதங்களுக்கு முன் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக வருகிற 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, மொத்தம் மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி என மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள் கடந்த 30ம் தேதி முதல் வருகிற 4ம் தேதி (நாளை மறுதினம்) வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 30ம் தேதி முதல் சுயேட்சை வேட்பாளர்கள் ஆர்வமுடன் மனு தாக்கல் செய்து வருகிறார்கள். திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. அந்த கட்சி தலைவர்கள், வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் கடந்த சில நாட்களாக தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

அதன்படி, திமுக சார்பில் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிய கம்யூனிஸ்டு, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, இடபங்கீடு முடிவடைந்துள்ளது. இதையடுத்து திமுக வேட்பாளர்கள் கடந்த இரண்டு நாட்களாக அறிவிக்கப்பட்டு வருகிறது. சென்னை, மாநகராட்சி வார்டு கவுன்சிலர்கள் தவிர மற்ற இடங்களுக்கு திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர். அதிமுக சார்பில் பாஜவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், பாஜ 30 சதவீத இடங்கள் வேண்டும் என்று பிடிவாதம் காட்டியது. கடைசியில் 18 சதவீதத்துக்கு மேல் குறைக்க மாட்டோம் என்று பிடிவாதம் காட்டினர். மேலும், பாஜவுடன் கூட்டணி வைத்துக்கொள்ள அதிமுக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால், அதிமுக கூட்டணியில் இருந்து பாஜவை கழட்டி விட்டனர். இதையடுத்து தமிழகத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிடுகிறது. அந்த கட்சி சார்பிலும் நேற்று மாலையுடன் அனைத்து வார்டுகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர். இதேபோன்று, பாமக, மநீம, அமமுக, சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்டவர்களும் வேட்பாளர்களை அறிவித்து விட்டனர். இந்த தேர்தலில், மதிமுகவுக்கு பம்பரம், அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கி மாநில தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் சூடுபிடித்துள்ளனர். பெரிய கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள், இன்று அல்லது நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். தற்போது 8 முனை போட்டி உருவாகி உள்ளது. தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் வருகிற 4ம் தேதி (நாளை மறுதினம்) மாலை 5 மணியுடன் முடிவடைகிறது.

இதையொட்டி, தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், முன்னணி தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். அதேபோன்று கூட்டணி கட்சி தலைவர்கள் கே.எஸ்.அழகிரி, வைகோ, திருமாவளவன், ராமகிருஷ்ணன், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் கனிமொழி எம்பி, உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ ஆகியோரும் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

அதிமுக சார்பில், வேட்பாளர்களுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தில் நாளை மறுதினம் (4ம் தேதி) வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள் ஆகும். 5ம் தேதி வேட்பு மனுக்கள் ஆய்வு செய்யப்படும். 7ம் தேதி வரை வேட்புமனுக்களை திரும்ப பெறலாம். 19ம் தேதி வாக்கு பதிவு நடைபெறும். 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வார்டு உறுப்பினர்கள் மார்ச் 2ம் தேதி பதவிஏற்பதற்கான முதல் கூட்டம் நடைபெறும். மார்ச் 4ம் தேதி மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

Tags : Nomination filing, tomorrow, the next day, closing, election field
× RELATED பாஜக ஆளும் மாநிலங்களில் மக்களால்...