×

திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயில் ஆழித்தேரோட்டத்தையொட்டி தேரின் கண்ணாடி கூண்டு பிரிக்கும் பணி மும்முரம்

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் ஆழித்தேரோட்ட விழாவினையொட்டி தேரின் கண்ணாடி கூண்டுகள் பிரிக்கும் பணி துவங்கியது.திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக இருந்து வரும் தியாகராஜசுவாமி கோயிலானது சைவ சமயத்தின் தலைமைபீடமாகவும், பிறக்க முக்தியளிக்கும் ஸ்தலமாகவும், சமய குறவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் தலமாகவும் இருந்து வருகிறது. மேலும் கோயில் 5 வேலி, குளம் 5 வேலி, ஓடை 5 வேலி என நிலப்பரப்பினை கொண்ட இக்கோயிலின் மூலவராக வன்மீகநாதரும், உற்சவராக தியாகராஜரும் இருந்து வரும் நிலையில் இக்கோயிலின் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.

கோயிலின் விழாக்களில் பங்குனி உத்திர விழாவானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டமும் அதன் பின்னர் கோயிலின் மேற்கு புறத்தில் உள்ள கமலாலய குளத்தில் தெப்ப திருவிழாவும் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் நடப்பாண்டில் இந்த ஆழித்தேரோட்டமானது அடுத்த மாதம் 15ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில் ஆழித்தேரானது மற்ற ஊர் தேர்களை போல் எண் பட்டை அறுகோணம், வட்டவடிவமைப்பு போன்று இல்லாமல் பட்டை வடிவ அமைப்பினை கொண்டதாகும். மொத்தம் 20 பட்டைகளை கொண்ட இந்த தேரானது நான்கு அடுக்குகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. கீழ்பகுதி 20 அடி உயரமும், 2வது பகுதி 4 அடி உயரமும், 3வது பகுதி 3 அடி உயரமும் கொண்டதாகவும். இறுதியாக 4வது பகுதியாக தேரின் மேடை பகுதியும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தான் தேரோட்டத்தின்போது தியாகரஜசுவாமி அமர்ந்து வலம் வருவது வழக்கம். மேலும் சாதாரணமாக 30 அடி உயரமும், 30 அடி அகலமும் கொண்ட இந்த தேரானது 4 ராட்சத இரும்பு சக்கரங்கள் உட்பட மொத்தம் 220 டன் எடை கொண்டதாகும்.

தேரோட்டத்தின்போது மூங்கில்கள், பனஞ்சப்பைகள் கொண்டு விமானம் வரையில் 48 அடி உயரத்திற்கு கட்டுமான பணி, அதன் மேல் 12 அடி உயரத்திற்கு சிகரம், அதற்கும் மேல் 6 அடி உயரத்தில் தேர் கலசம் என மொத்தம் 96 அடி உயரத்தில் அலங்கரிக்கப்பட்டு சுமார் 300 டன் எடையுடன் முன் பகுதியில் 33 அடி நீளமும், 11 அடி உயரமும் கொண்ட கம்பீரமான 4 மரக்குதிரைகள் கட்டப்பட்டு நகரின் 4 வீதிகளையும் ஆடி அசைந்தாடியபடி நகர்ந்து செல்லும் காட்சியானது கண்கொள்ளா காட்சியாகும்.இந்நிலையில் இந்த ஆழித்தேரோட்டத்தையொட்டி தேர் கட்டுமான பணிக்கு குறைந்தபட்சம் 45 நாட்கள் தேவை என்ற நிலையில் இதற்காக அதன் கண்ணாடி கூண்டுகள் பிரிக்கும் பணியில் தொழிலாளர்கள் நேற்று ஈடுபட்டனர்.

Tags : Thiruvarur Thiagarajar Swamy Temple , Thiruvarur Thiyagaraja Swamy Temple The glass cage of the chariot in the wake of the flood The task of separation is busy
× RELATED திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயில்...