×

ஈக்வடாரில் நிலச்சரிவு.. சகதியில் சிக்கி 24 பேர் மூச்சு திணறி உயிரிழப்பு... 48 பேர் காயம்!!

ஈக்வடார் : ஈக்வடார் நாட்டின் தலைநகர் கியூட்டோவில் வடக்கில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. கனமழையால் ஏற்பட்ட சகதி வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை அன்று ஈக்வடார் நாட்டில் கனமழை கொட்டி தீர்த்ததால் லா காஸ்கா, லா குமுனா உள்ளிட்ட வடக்கு பகுதிகளில் உள்ள பள்ளத்தாக்கில் வெள்ளம் தேங்கியது. அப்போது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதால் பாறைகள் மற்றும் சேற்றை அடித்து கொண்டு வெள்ளம் கியூட்டோ நகருக்குள் பாய்ந்தது.

திடீரென ஏற்பட்ட சகதி வெள்ளத்தால் நகரில் உள்ள சாலைகள் அனைத்திலும் சுமார் 6 அடி உயரத்திற்கு சகதி பாய்ந்து ஓடியது. சாலைகளில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள் வெகு தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டன. ஏராளமானோர் சகதி வெள்ளத்தில் சிக்கி கொண்டனர்.வெள்ளத்தால் இழுத்துச் செல்லப்பட்டும் பாறைகளில் சிக்கியும் 24 பேர் உயிரிழந்துள்ளதாக ஈக்வடார் அரசு தெரிவித்துள்ளது. 48 பேர் காயம் அடைந்துள்ள நிலையில், 20க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை என்று கூறப்படுவதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. வெள்ளம் தற்போது வடிந்திருக்கக் கூடிய நிலையில், சாலைகளில் படிந்துள்ள சகதி, மண் மற்றும் பாறைகளை அகற்றும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.


Tags : Ecuador , ஈக்வடார்,நிலச்சரிவு,கியூட்டோ,கனமழை
× RELATED ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஈக்வடார்...