×

சொர்க்க பூமியில் சுத்தம் இல்லை கழிவுகளால் நிரம்பி வழியும் மூணாறு முதிரைப்புழை ஆறு: குப்பைகள் கொட்டுவதை தடுக்க கோரிக்கை

மூணாறு:  மூணாறில் உள்ள முதிரைப்புழை ஆற்றில் குப்பைகள், கழிவுகளை கொட்டுவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு நகரம், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியாக திகழ்கிறது. இந்த நகருக்கு, தினசரி ஆயிரக்கணக்கில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். நல்ல தண்ணி ஆறு, கன்னிமலை ஆறு, குண்டலை ஆறு ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடம்தான் மூணாறு நகராகும். கடல் மட்டத்திலிருந்து 1,600 அடி உயரத்தில் இந்த நகரம் அமைந்துள்ளது. இந்நிலையில், நகரில் உள்ள முதிரைப்புழை ஆற்றின் இருபுறமும் பொதுமக்களின் குடியிருப்புகள் உள்ளன. நகரின் இதயம் என இந்த ஆறு அழைக்கப்படுகிறது. முன்பு ஆற்றில் தெளிந்த நீர் ஓடி ரம்மியமாக இருக்கும்.

நாளடைவில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லும் பகுதியாக மாறியதாலும், வணிக நிறுவனங்கள் பெருகியதாலும், முதிரைப்புழை ஆற்றில் கட்டிடக் கழிவுகள், குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டன. இதனால், ஆற்றின் நிறம் மாறியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் குப்பைகளின் ஓடையாக முதிரைப் புழை திகழ்கிறது. இந்நிலையில், ஆற்றில் தேங்கிய கழிவுகளை அகற்ற பஞ்சாயத்து தலைமையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், கடுமையான விதிகளை அமல்படுத்தாததும், தொலைநோக்கு பார்வை இல்லாமல் கழிவுகள் கொட்டுவதாலும் ஆற்றின் தன்மை மாறி வருகிறது. எனவே, முதிரைப்புழை ஆற்றில் கொட்டப்படும் கழிவுகளை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Tags : Heaven ,earth , Heaven and earth are not clean.
× RELATED இந்தியர்களின் உடல்நலத்தை கெடுத்து...