×

தொடர்ந்து 8வது ஆண்டாக வருமானவரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை: கோதாவரி, காவிரி உள்பட 5 நதிகள் இணைப்பு திட்டம்; நாடு முழுவதும் ஒரே பத்திரப்பதிவு

* 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்
* ரூ.48,000 கோடியில் 18 லட்சம் புதிய வீடுகள்
* ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

புதுடெல்லி: நடுத்தர மக்கள், சம்பளதாரர்களின் பெரும் எதிர்பார்ப்பை ஒன்றிய பட்ஜெட் புஸ்வாணமாக்கி விட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த ஒன்றிய பட்ஜெட்டில், தொடர்ந்து 8வது ஆண்டாக வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதில், கோதாவரி, காவிரி உள்ளிட்ட 5 நதிகள் இணைப்பு திட்டம், நாடு முழுவதும் ஒரே பத்திரப்பதிவு, 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், ரூ.48,000 கோடியில் 18 லட்சம் புதிய வீடுகள் போன்ற திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. கொரோனா பாதிப்புக்குப் பிறகு, பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில், வளர்ச்சியை விரைவுபடுத்தவும், சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்தவும், விரைவில் நடக்க உள்ள 5 மாநில தேர்தலை கருத்தில் கொண்டும் ஒன்றிய பட்ஜெட்டில் பல்வேறு கவர்ச்சிகரமான சலுகைகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

குறிப்பாக, வருமான வரி உச்ச வரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாகவோ அல்லது ரூ.3 லட்சமாகவோ அதிகரிக்கப்படும் என சம்பளதாரர்கள், நடுத்தர மக்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். இதே போல விவசாயிகள், குறு, சிறு தொழில் நிறுவனங்கள் பட்ஜெட்டில் சலுகைகள், வரி விலக்குகளை எதிர்பார்த்திருந்தனர். இவ்வாறு பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஒன்றிய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. சம்பிரதாய முறைப்படி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று காலை அவரது இல்லத்தில் சந்தித்து பட்ஜெட் தாக்கலுக்கான ஒப்புதலைப் பெற்றார். பின்னர், பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவையில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் தரப்பட்டது.

அதைத் தொடர்ந்து, காலை 11 மணிக்கு மக்களவையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன், வரும் மார்ச் 1ம் தேதி முதல் தொடங்கக் கூடிய 2022-23ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். வரும் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.2 சதவீதமாக இருக்கும் என குறிப்பிட்ட அமைச்சர் நிர்மலா சீதாரமன், அடுத்த 25 ஆண்டுக்கான நாட்டின் வளர்ச்சியை உறுதிப்படுத்த வலுவான அடித்தளம் அமைக்கும் வகையில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக தனது துவக்க உரையில் குறிப்பிட்டார். ஆனால் பட்ஜெட்டிலோ, வழக்கம் போல் சாமானிய மக்களின் எந்தவொரு எதிர்பார்ப்பும் நிறைவேறாமல் ஏமாற்றமே மிஞ்சியது. குறிப்பாக, வருமான வரி உச்ச வரம்பில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால் சம்பளதாரர்கள், நடுத்தர மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கடந்த 2014ல் பாஜ தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி முதல் முறையாக அமைந்த பிறகு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அப்போதைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ரூ.2 லட்சமாக இருந்த வருமான வரி உச்ச வரம்பை ரூ.2.5 லட்சமாக உயர்த்தினார். இதே போல், மூத்த குடிமக்களுக்கான வருமான வரி உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டது. அதன் பிறகு, இந்த விஷயத்தில் தொடர்ந்து 8 ஆண்டாக ஒவ்வொரு முறையும் சம்பளதாரர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி வருகிறது.

கொரோனா காலகட்டம் என்பதால் எந்த புதிய வரியும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை என அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது சற்று ஆறுதல் தரும் விஷயமாகும். அதுதவிர, தமன்கங்கா-பிஞ்சால், பர்தபி-நர்மதா, கோதாவரி-கிருஷ்ணா, கிருஷ்ணா-பெண்ணாறு, பெண்ணாறு- காவிரி ஆகிய 5 நதிகள் இணைப்பு திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும், மாநிலங்களிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்ட உடன் திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அரசு உதவி அளிக்கும் என்றும் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ரிசர்வ் வங்கி சார்பில் அரசே பிளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய டிஜிட்டல் கரன்சி கொண்டு வர இருப்பதாக பட்ஜெட்டில் அறிவித்த நிர்மலா சீதாராமன், பிட்காயின் போன்ற டிஜிட்டல் கரன்சி முதலீட்டு மூலம் ஈட்டும் வருவாய்க்கு 30% வரி விதிப்பும் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது. நில ஆவணங்களை மின்னணு முறையில் ஆவணப்படுத்த `ஒரே நாடு; ஒரே பத்திரப்பதிவு முறை’ என்கிற திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நாட்டில் எங்கிருந்து வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்யலாம். மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் 60 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் ரூ.48,000 கோடியில் 80 லட்சம் வீடுகள் கட்டப்படும் போன்ற வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.

கடந்த நிதியாண்டில் ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்பனை செய்த ஒன்றிய அரசு, வரும் நிதியாண்டில் எல்ஐசியின் பங்குகளை விற்பதில் வேகம் காட்டும் என பட்ஜெட்டில் தெரிவித்துள்ளது. அதே போல கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கூடுதல் வரி 12 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் வைரத்திற்கு 5% சுங்க வரி குறைக்கப்பட்டுள்ள நிலையில், குடைகளுக்கான சுங்க வரி 10ல் இருந்து 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
சுமார் ஒன்றரை மணி நேரம் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையாற்றி முடித்தார். அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

* டிஜிட்டல் கரன்சி பரிமாற்றத்துக்கு 30 சதவீத வரி
ரிசர்வ் வங்கியின் மூலம் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம், கிரிப்டோகரன்சி உள்ளிட்ட டிஜிட்டல் கரன்சியின் பொருளாதாரத்தை பெரிதும் ஊக்குவிக்கும். டிஜிட்டல் கரன்சிகள் மூலமாக இணைய பரிவர்த்தனைகள் ஊக்குவிக்கப்படும். டிஜிட்டல் கரன்சியானது செயல்திறன்மிக்க மலிவான ரூபாய் மேலாண்மை அமைப்புக்கு வழிவகுக்கும். எனவே, பிளாக்செயின் மற்றும் இதர தொழில்நுட்பங்களை பயன்படுத்தி 2022-2023ம் ஆண்டில் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. டிஜிட்டல் கரன்சி பரிவர்த்தனைக்கு 30 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

துறை வாரியாக நிதி ஒதுக்கீடு விவரம்
பாதுகாப்பு    ரூ. 5.25 லட்சம் கோடி
உணவு, பொது விநியோகம்    ரூ. 2.17 லட்சம் கோடி
நெடுஞ்சாலை    ரூ.1.99 லட்சம் கோடி
உள்துறை    ரூ.1.85 லட்சம் கோடி
ரயில்வே    ரூ. 1.40 லட்சம் கோடி
ஊரக வளர்ச்சி    ரூ. 1.38 லட்சம் கோடி
வேளாண்மை, விவசாயிகள் நலன்    ரூ. 1.32 லட்சம் கோடி
ரசாயனம் மற்றும் உரம்    ரூ. 1.07 லட்சம் கோடி
தகவல் தொடர்பு    ரூ. 1.05 லட்சம் கோடி

* ஏழை மக்களுக்கு 80 லட்சம் வீடுகள்
பிரதமரின் ஆவாஸ் திட்டத்தின் கீழ் அடுத்த நிதியாண்டுக்குள் நகரம் மற்றும் கிராமப்பகுதிகளில் தகுதியான ஏழைகளுக்கு 80 லட்சம் வீடுகள் கட்டி முடிக்க ரூ.48 ஆயிரம் கோடி ஒன்றிய பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாநில அரசுகளிடம் இருந்து நிலம், கட்டிட அனுமதி பெறப்பட்ட பிறகு ஒன்றிய அரசு இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்தும்.

* நாட்டின் எப்பகுதியிலும் பத்திரப்பதிவு செய்யலாம்
நாடு முழுவதும் சிறந்த நிலப்பதிவேடு மேலாண்மைக்காக தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பதிவுகளை நிர்வகிப்பதற்கு வசதியாக, தனித்துவமான நிலப்பார்சல் அடையாள எண்ணை கடைபிடிக்க மாநிலங்கள் ஊக்குவிக்கப்படும். அட்டவணைப்படி 8 மொழிகளில் ஏதேனும் ஒன்றில் நிலப்பதிவேடுகளை மொழி பெயர்ப்பதற்கான வசதியும் அறிமுகப்படுத்தப்படும். தேசிய பொது ஆவணப்பதிவு அமைப்புடன், ‘ஒரே நாடு, ஒரே பத்திரப் பதிவு’ மென்ெபாருளுடன் தத்தெடுப்பு, இணைப்பு பத்திரங்கள் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஆவணங்களை நாட்டின் எந்த பகுதியிலும் பதிவு செய்வதற்கான நடைமுறையும் ஊக்குவிக்கப்படும்.

* லோக்பால் அமைப்பு ரூ.34 கோடி ஒதுக்கீடு
ஊழல் தடுப்பு அமைப்பான லோக்பாலுக்கு ரூ.39.67 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், 2022-23 பட்ஜெட்டில் ரூ.34 கோடியாக குறைத்து ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய 2021-22 நிதியாண்டில் ரூ.26 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இதன் கட்டுமான செலவினங்களுக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

* கூடுதல் வருமானத்தை கணக்கு காட்ட சலுகை
ஒன்றிய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.41.96 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.  கடந்த நிதியாண்டில் இதற்கு ரூ.38.67 கோடி ஒதுக்கப்பட்டு, பின்னர் ரூ.38.63 கோடியாக குறைக்கப்பட்டது. இதன் தலைமை செயலக செலவினங்களுக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக நிதி நிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊழல் கண்காணிப்பு ஆணையம் ரூ.41.96 கோடி
* 2022-23ம் நிதியாண்டுக்கான ஒன்றிய அரசின் மூலதன செலவுகள் 10.68 லட்சம் கோடியாக அதிகரிக்கும். இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தில் 4.1% என கணக்கிடப்பட்டுள்ளது.
* கூடுதல் வருமானத்தை கணக்கில் காட்டி கூடுதல் வரி செலுத்த விரும்புவோருக்கு திருத்தப்பட்ட கணக்கு தாக்கல் செய்ய புதிய வசதி அறிமுகம் செய்யப்படும். திருத்தப்பட்ட கணக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம் 2 ஆண்டுகளாக நீட்டிக்கப்படும்.

Tags : Godavari ,Cauvery , No change in income tax ceiling for 8th consecutive year: 5 rivers link project including Godavari, Cauvery; The only bond across the country
× RELATED மாமல்லபுரத்தில் ஆந்திர உணவு கண்காட்சி