சீன ஆதரவு மாஜி அதிபரால் இருநாட்டு உறவு பாதிப்பு; இந்தியாவுக்கு எதிராக கோஷமிட்டால் 6 மாதம் ஜெயில்: மாலத்தீவு நாட்டில் புதிய மசோதா அறிமுகம்

மாலி: மாலத்தீவில் இந்தியாவுக்கு எதிராக கோஷமிட்டால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு புதிய சட்டத்தை கொண்டு வருவதற்கான மசோதாவை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தியாவும், அண்டை நாடான மாலத்தீவும் நல்லுறவைக் கொண்டிருக்கும் நிலையில், சீனாவின் தலையீடால் இந்தியாவுக்கு எதிராக மாலத்தீவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில், மாலத்தீவில் இருந்து இந்தியாவுக்கு எதிராக பல வீடியோக்கள் வெளிவந்தன. ‘இந்தியா அவுட்’ என்ற ‘டி-சர்ட்’ அணிந்து பலர் இந்தியாவுக்கு எதிராக போராடினர்.

இதுபோன்ற போராட்டங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை பலவீனப்படுத்தி வருவதாக இருதரப்பிலும் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், மாலத்தீவில் ஆளும் மாலத்தீவு ஜனநாயகக் கட்சி (எம்டிபி), புதிய சட்ட மசோதாவை கொண்டு வந்துள்ளது. அதில், ‘சீனாவுக்கு ஆதரவாக செயல்படும் முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன், இந்தியாவுக்கு எதிரான நச்சுப் பிரசாரத்தை செய்து வருகிறார். இது சட்டவிரோதமாக அறிவிக்க புதிய மசோதா கொண்டு வரப்படும். இதன் மூலம், அண்டை நாடுடன் சமச்சீரான வெளியுறவுக் கொள்கையை கடைப்பிடிக்க முடியும்.

இந்தியாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினால் மாலத்தீவின் ரூஃபியாவான 20,000 அபராதம் விதிக்கப்படும். மேலும் 6 மாதங்கள் சிறைத்தண்டனை அல்லது ஓராண்டு வீட்டுக் காவலில் வைக்கப்படுவார்கள். எனவே, ‘இந்தியா அவுட்’ என்ற முழக்கத்தை முன்னெடுத்தால், அது குற்றமாக அறிவிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த டிசம்பர் 19ம் தேதி மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியாவுக்கு எதிராக பரப்பப்படும் பொய்கள் மற்றும் வெறுப்பு குறித்து மாலத்தீவு அரசாங்கம் கவலை கொண்டுள்ளது.

இந்தியா எங்களின் நெருங்கிய கூட்டாளியாகும்; ஆனால் இங்குள்ள சில குழுக்களின் தலைவர்கள் இருநாடுகளுக்கு இடையிலான உறவை கெடுக்க பிரசாரம் செய்கின்றனர்’ என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: