இஸ்ரேலில் 11 வயது சிறுவனுக்கு ஆல்பா, டெல்டா, ஒமிக்ரான்: சக மாணவர்கள் 10 பேருக்கும் கொரோனா

ஜெருசலேம்: இஸ்ரேலில் 11 வயது சிறுவனுக்கு ஆல்பா, டெல்டா, ஒமிக்ரான் ஆகிய மூன்று தொற்றும் உறுதியானதால், மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இஸ்ரேல் நாட்டின் மத்திய இஸ்ரேலில் உள்ள கெஃபர் சபாவில் வசிக்கும் அலேன் ஹெல்ஃப்காட் என்ற 11 வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது தொற்று மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. பரிசோதனை முடிவில், அந்த சிறுவனுக்கு உருமாறிய வைரஸ் தொற்றுகளான ஆல்பா, டெல்டா, ஒமிக்ரான் ஆகிய மூன்றும் பாதித்துள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘கொரோனா பாதித்த சிறுவனுக்கு மூன்றாவது முறையாக எடுக்கப்பட்ட பரிசோதனையில், அவருக்கு ஆல்பா, டெல்டா, ஒமிக்ரான் தொற்றின் அறிகுறியுடன் கூடிய வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டது. தற்போது அந்த சிறுவன் நலமுடன் உள்ளார். இருந்தும் தொடர் கண்காணிப்பில் உள்ளார். பள்ளிக்கு சென்ற போது, அவருக்கு தொற்று பரவியுள்ளது. கொரோனா பரவலின் வழித்தடம் குறித்து ஆய்வு செய்த போது, சிறுவனது வகுப்பில் இருந்த 27 மாணவர்களில் 10 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதனால், அலேன் ஹெல்ஃப்காட்டுக்கும் தொற்று பரவியுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் எய்ட்ஸ் நோயாளிக்கு 21 முறை உருமாறிய கொரோனா

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த 22 வயதான எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு கொரோனா உறுதியானது. அவரது உடலில் கடந்த 9 வாரங்களாக கொரோனா இருந்தது. கடைசியாக அவரை பரிசோதித்த போது, அவரது உடலில் கொரோனா தொற்று 21 முறை உருமாறியுள்ளது. குவாசுலு-நடால் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்ததால், அந்த பெண்ணுக்கு உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருந்ததாக அவர்கள் கூறினார்.

Related Stories: