×

சென்னை மாவட்ட மாணவ, மாணவியர்களுக்கு 2021 - 2022-ம் ஆண்டிற்கான திருக்குறள் முற்றோதல் குறித்து செய்திக்குறிப்பு

சென்னை: சென்னை  மாவட்ட மாணவ, மாணவியர்களுக்கு 2021 - 2022-ம் ஆண்டிற்கான திருக்குறள் முற்றோதல் குறித்து செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இலக்கியங்கள் அனைத்திலும் சிறந்ததும் உன்னதமானதும் மனித குலம் அனைத்திற்குமாக உதித்த மேலானதும் ஆகிய தன்னிகரற்ற படைப்பு திருக்குறள். அத்தகைய சிறப்புமிக்க தெய்வமறை எனப்போற்றப்படும் அறக்கருத்துக்களடங்கிய திருக்குறட்பாக்களின் மாண்பை வருங்கால மாணவர்கள் இளம் வயதிலேயே மனப்பாடம் செய்தால் அவை பசுமரத்தாணிபோல் பதிந்து, நெஞ்சில் நிலைத்து அவர்களது வாழ்க்கைக்கு வழிகாட்டும்.

தாம் பெறுகின்ற கல்வியறிவோடு, அறநெறி ஆற்றலை தன்னகத்தே பெற்று நல்லொழுக்கம் மிக்கவர்களாக மாணவர்களை உருவாக்கிட வேண்டும் என்ற உன்னதமான நோக்கில் தமிழ்நாடு அரசு திருக்குறள் முற்றோதல் திட்டத்தை ஆண்டு தோறும் செயற்படுத்தி வருகிறது. எனவே, திருக்குறள் முற்றோதல் செய்யும் மாணவச் செல்வங்களுக்கு பரிசு வழங்கிப் பாராட்டுவது, மாணவர்களின் நல்வாழ்வுக்குத் துணை நிற்பதாகவும், திருக்குறள்  நெறி வழிவகுப்பதாகவும் அமையும். 1330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் மாணவர்கள் 70 பேருக்கு திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு தலா ரூ.10,000/- (ரூபாய் பத்தாயிரம் மட்டும்) வீதம் பரிசுத்தொகை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கி ஆண்டுதோறும் சிறப்பிக்கப்பெறுகின்றனர்.

திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசுக்கு கலந்து கொள்ளும் மாணவர்கள், திறனறி குழுவினரால் திறனாய்வு செய்து தகுதியானவர்கள் தெரிவுசெய்யப்பெற்று, பரிசு பெறுவதற்கு அரசுக்குப் பரிந்துரை செய்யப்பெறுகிறார்கள்.  2021 - 2022 ஆம் ஆண்டிற்கான திருக்குறள்  முற்றோதல் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ , மாணவியர்கள் தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.com என்ற வலைதள முகவரியில் விண்ணப்பங்களைப்  பதிவிறக்கம் செய்து நிறைவு செய்யப்பெற்ற விண்ணப்பங்களை கீழ்காணும் முகவரிக்கு  நேரிலோ அல்லது  அஞ்சல் மூலமாகவோ அளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044 - 28190448, 044 - 28190412,   044 - 28190413 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.

திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு பெறுவதற்கான விதிமுறைகள்

* 1330 திருக்குறட்பாக்களையும் முழுமையாக ஒப்புவிக்கும் திறன் பெற்றவராக இருத்தல் வேண்டும்.

* இயல் எண், பெயர், அதிகாரம் எண், பெயர், குறள் எண், பெயர் போன்றவற்றை தெரிவித்தால் அதற்குரிய திருக்குறளைக் கூறும் திறன் பெற்றவராக இருத்தல் வேண்டும்.

* திருக்குறளின் அடைமொழிகள், திருவள்ளுவரின் சிறப்புப்பெயர்கள், திருக்குறளின் சிறப்புகள் ஆகியவற்றை அறிந்தவராக இருத்தல் வேண்டும்.

* சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளியில் பயில்பவராக இருத்தல் வேண்டும்.  அரசு / அரசு உதவிபெறும் / தனியார் / பதின்மப் பள்ளிகள் போன்ற பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பங்கு பெறலாம்.

* தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பெறும் இப்பரிசினை இதற்குமுன்னர் பெற்றவராக இருத்தல் கூடாது.

* திருக்குறளின் பொருளும் அறிந்திருப்பின் கூடுதல் தகுதியாகக் கருதப்பெறும்.


Tags : Chennai district ,Thirukkural , Press release for students of Chennai district on the siege of Thirukkural for the year 2021 - 2022
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில்...