வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன்பே மனுதாக்கல் செய்த அதிமுகவினர்: இது திருப்பத்தூர் கூத்து

திருப்பத்தூர்: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம்தேதி நடைபெற உள்ளது. இதற்காக கட்சிகள் சார்பில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு நேற்றுவரை அதிமுக சார்பில் பட்டியல் அறிவிக்கப்படவில்லை. ஆனால் திருப்பத்தூர் நகர மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட 17 பேர் நேற்று நகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதற்காக அவர்கள் கொரோனா விதியை மீறி தங்களது ஆதரவாளர்களுடன் மேளதாளங்கள் முழங்க புதுப்பேட்டை ரோட்டில் இருந்து நகராட்சி அலுவலகம் வரை சுமார் 2 கி.மீ தூரம் அனுமதியின்றி ஊர்வலமாக வந்தனர்.

அப்போது அவர்களில் பலர் மாஸ்க் அணியாமலும் சமூக இடைவெளியை மறந்தும் பங்கேற்றனர். இந்த ஊர்வலம் காரணமாக கிருஷ்ணகிரி மெயின்ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும் வேட்பாளர்கள் மற்றும் முன்மொழிபவர்கள் 2 பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய செல்ல வேண்டும் என்ற நிபந்தனையும் பின்பற்றப்படவில்லை. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதற்கிடையில் நேற்று திருப்பத்தூர் நகராட்சியில் பாமக, பாஜக, சுயேச்சை உள்ளிட்ட 23 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

வேட்பாளர்கள் ரகசியமாக அறிவிப்பு?

பட்டியல் அறிவிப்புக்கு முன்னதாகவே திருப்பத்தூர் நகராட்சியில் போட்டியிட நேற்று அதிமுகவினர் வேட்பு மனு தாக்கல் செய்த சம்பவத்தால் அதிருப்தியடைந்த அக்கட்சியின் நிர்வாகிகள் சிலர் கூறுகையில், ‘வேட்பாளர்களை அதிமுக மாவட்ட செயலாளர்களே தேர்வு செய்து அறிவிக்கலாம் என்று கட்சியின் தலைமை அறிவித்துள்ளதாம். இதனால் மாவட்ட செயலாளர் ரகசியமாக வேட்பாளர்களை அறிவித்துள்ளார். அதன்படியே அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ததாக தெரிகிறது’ என்றனர்.

Related Stories: