×

ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் மீதான வழக்கு விசாரணைக்கு விதித்த தடை நீட்டிப்பு: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் மீதான வழக்கு விசாரணைக்கு விதித்த தடையை நீட்டித்து  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் வேட்புமனு தாக்கலில் விபரங்களை மறைத்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய ஓபிஎஸ் மனு மீது தீர்ப்பளிக்கும் வரை இடைக்கால தடை நீட்டிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது .

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தேனி எம்பி ரவீந்திரநாத் ஆகியோர் தேர்தல் வேட்புமனு தாக்கலில் விபரங்களை மறைத்ததாக, இருவர் மீதும் தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் எம்பி ரவீந்திரநாத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக அரசு தரப்பு ஆவணங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் கேட்டு, தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மனு அளித்தனர். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் பிப். 1ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டது. அதுவரை வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கூடாது எனவும், அதற்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கவும், தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று சென்னை சென்றனர். இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மற்றும் ரவீந்திரநாத் எம்பி மீதான வழக்கு தொடர்பான ஆவணங்களை தேனி குற்றப்பிரிவு போலீசார் சமர்ப்பித்தனர். வேட்புமனு தாக்கலில் விபரங்களை மறைத்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய ஓபிஎஸ் மனு மீது தீர்ப்பளிக்கும் வரை இந்த வழக்கை விசாரிக்க இடைக்கால தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.


Tags : OBS ,Ravindranath , OBS, son Rabindranath, trial, extension of ban, Chennai HIGH COURT
× RELATED பாஜவை தோற்க வைத்து விட்டு ஓபிஎஸ், டிடிவியுடன் அண்ணாமலை தனிக்கட்சி