×

சிறுவாணி அணையில் இருந்து குடிநீர் விநியோகத்தை அதிகரிக்க கோரி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!

சென்னை: சிறுவாணி அணையில் இருந்து குடிநீர் விநியோகத்தை அதிகரிக்க கோரி கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கோவை மாநகராட்சி, சிறுவாணி குடிநீர் திட்ட பயனாளிகளுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்க வேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

அந்த கடிதத்தில்: கோயம்புத்தூர் நகருக்கு தண்ணீர் வழங்க வேண்டிய முக்கிய நீர் ஆதாரமாக சிறுவாணி ஆணை உள்ளது. தற்போது கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு மொத்த நீர் தேவை 265 மில்லியன் லிட்டர், இதில் 101.40 மில்லியன் லிட்டர் குடிநீர் சிறுவாணி அணையை ஆதாரமாக கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

சிறுவாணி அணையில் இருந்து ஆண்டுதோறும் 1.30 டி.எம்.சி. நீர் வரை ஜூலை 1 முதல் ஜூன் 30 வரை குடிநீர் வழங்கும் வகையில் தமிழக அரசுக்கும் கேரள அரசுக்கும் இடையே ஒப்பந்தம் உள்ள நிலையில் கடந்த 6 ஆண்டுகளில் கேரள அரசு 0.484 டி.எம்.சி.யில் இருந்து 1.128 டி.எம்.சி. வரையிலான தண்ணீரையே வழங்கியுள்ளதாக புள்ளி விவரத்தோடு முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளில் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதுமான மழை பெய்த நிலையிலும் கேரளா நீர்பாசனத்துறை முழு நீர் தேக்க மட்டத்திற்கு பதிலாக, இருப்பு நிலையை குறைத்து பராமரித்து வருவதை தங்கள் கவனத்திற்கு கொண்டு கொண்டுவந்ததாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அணையின் நீர்மட்டம் குறைக்கப்பட்டுள்ளதால் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் பயனாளிகளுக்கு  வழங்க திட்டமிட்ட அளவினை விட குறைந்த அளவில் தான் தண்ணீரை வழங்க முடிகிறது என தமிழக முதல்வர் கூறியுள்ளார்.

இதேபோல் கேரள நீர் பாசனத்துறை கடந்த மாதம் 3-ம் தேதி நீர் வரக்கூடிய லெவல் 4 என்ற பாதையை கட்டுப்பாட்டில் வைத்துள்ள சூழலில், கேரளா அரசின் மறுஉத்தரவு வரும் வரை இந்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்த முடியாது எனவும் கேரள நீர் பாசனத்துறை தெரிவித்துள்ளதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


Tags : Kerala ,Pinarayi Vijayan ,Tamil ,Md. ,KKA Stalin , Siruvani Dam, Drinking Water Supply, Letter from Kerala Chief Minister Binarayi Vijayan, Chief Minister MK Stalin,
× RELATED கேரள முதல்வர் வெளிநாடு பயணம்