×

நயினார் நாகேந்திரன் பேச்சால் எந்த பிரச்னையும் வெடிக்கவில்லை; அதிக இடங்களில் வேட்பாளரை நிறுத்தவே தனித்து போட்டி: தேசிய அளவில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும்

சென்னை: சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கூட்டணி தொடர்பான அவசர கூட்டம் நேற்று காலை நடந்தது. இந்த கூட்டத்தில் பாஜ தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சுமார் 2 மணி நேரம் இந்த கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு பிறகு பாஜ தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி:நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து, பாஜ தலைவர்கள் அனைவரும் ஓபிஎஸ், இபிஎஸ்சிடம் பேசி விட்டு வந்தோம். பாஜவை பொறுத்தவரை வேகமாக வளர்ந்து வரக்கூடிய கட்சி. தலைவர்கள்முதல் தொண்டர்கள் வரை அனைவரும் உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து வேலை செய்யக்கூடியவர்கள்.நிறைய இடங்களில் நிற்க வேண்டும் என்று விருப்பப்படுகிறார்கள. தொண்டர்களின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும் என்பது மாநில தலைமையின் முடிவு. அது தான் தலைமையின் முடிவு.

பாஜவின் அகில இந்திய தலைவர்களும் எங்களின் கருத்தை ஏற்று கொண்டார்கள். எங்களுக்கு முழு சுதந்திரத்தை கொடுத்து இருக்கிறார்கள். அதை வைத்து தான் அதிமுக தலைவர்களிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினோம்.அதே நேரத்தில் ஒரு பெரிய கட்சியாக இருக்கக்கூடிய அதிமுகவுக்கும் ஒரு பிரச்னை இருக்கிறது. 2 நாட்களாக பேசி முடித்த பின்னர் ஒரு முக்கியமான முடிவை எடுத்து இருக்கிறோம்.

இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜ தனித்து போட்டியிடும். அனைத்து இடங்களில் பாஜக வேட்பாளரை நிறுத்த போகிறோம். அதே நேரத்தில் நான்  நேசிக்கக்கூடிய தலைவர்கள் ஓபிஎஸ், எடப்பாடியிடம் கூட மிக தெளிவாக பேசியிருக்கிறோம். நம்முடைய கூட்டணி என்பது தேசிய ஜனநாயக கூட்டணியாக தொடர்ந்து இருக்கும். 2024 நாடாளுமன்ற தேர்தல் வரை தொடர்ச்சியாக இருப்போம், இருந்து கொண்டிருக்கிறோம். முக்கியமான விஷயங்களில் 2 கட்சிகளின் நிலைப்பாடு ஒன்றாக இருக்கும்.

வரும் நாட்களில் பாஜ, அதிமுகவின் நல்லுறவு தொடரும். அதில் எந்த ஒரு  மாற்று கருத்தும் இல்லை.  ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாஜ 9.1 சதவீதம் போட்டியிட்டது. இந்த முறை அதிமுக தலைவர்கள் பாஜக போட்டியிட 10 சதவீதம் ஒதுக்கியிருந்தார்கள். இதனை முதற்கட்ட பேச்சுவார்த்தையில் சொல்லியிருந்தார்கள். நாங்கள் அதிகமாக கேட்டோம். எங்களுடைய லிஸ்டை கொடுத்தோம். பாஜகவுக்கு நம்பிக்கை இருக்கிறது.

அதிகப்படியான இடங்களில் எங்களுடைய வேட்பாளர்களை தமிழக மக்கள் வெற்றி பெற செய்து உள்ளாட்சியில் அமர்த்துவார்கள் என்று. ஓபிஎஸ், இபிஎஸ்ஸை பொறுத்தவரை அவர்கள் ரொம்ப தயார் நிலையில் இருந்தார்கள். நல்ல நாளில் ஒரு வேட்பாளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்பது தலைவர்களின் கருத்து. நாங்களும் கூட ஆமோதித்தோம். கூட்டணி பேச்சுவார்த்தை எட்டிய போது அதை பார்த்து கொள்ளலாம் என்று தெரிவித்தோம். தனித்து போட்டியிடுவதால்எந்த ஒரு மனவருத்தமும் கிடையாது.உள்ளாட்சியில் பெரும்பாலான திட்டங்கள் பிரதமரின் திட்டங்களாக தான் உள்ளது. அதை தெளிவாக மக்களிடம் கொண்டு செல்வதற்கு இதை வாய்ப்பாக பார்க்கிறோம்.

11 வருடம் கழித்து உள்ளாட்சி தேர்தலில் தனியாக பாஜக களம் காண்கிறது. நிறைய இடங்களில், பாஜக சென்றடையாத இடங்களில் தாமரை மலர்ந்து பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். எங்களின் கூட்டணி உடையவில்லை. பல மாநிலங்களில் உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி வைத்து கொள்ளவே மாட்டோம். தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்கிறது. உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுகிறோம். நயினார் நாகேந்திரன் பேசிய விஷயத்தால் எந்த பிரச்னையும் வெடிக்கவில்லை. அவர் உள்பட அனைவரும் வருத்தம் தெரிவித்து இருக்கிறோம். அதை இரண்டு கட்சிகளுமே எப்போதும் பெரிதுபடுத்தியது இல்லை. எங்களுடைய முழு ஒத்துழைப்பு மாநிலத்தின் முதல்வராக இருக்கக்கூடிய மு.க.ஸ்டாலினுக்கு இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிமுக கூட்டணியில் இருந்து பாஜ வெளியேறியது ஏன்? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: ஒவ்வொரு கட்சிக்கும் எதிர்பார்ப்பு இருக்கும். எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு எங்களுடைய கட்சியின் நலனையும், கட்சியினரின் நலனையும் மிக உன்னிப்பாக கவனிக்க வேண்டியது முக்கியம். இதனால்தான் அவர்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாத சூழ்நிலையில்தான், எங்களுடைய நிலைமையை சொன்னோம். அதிகப்படியான இடங்களை உங்களுக்கு தர முடியாத நிலையில் இருக்கிறோம் என்று கூறினோம். இதையடுத்து அவர்கள் ஒரு முடிவு எடுத்தார்கள். இது அவர்கள் கட்சி எடுத்த முடிவு. இதுபற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. நாங்கள் தனித்தன்மையோடு பல தேர்தல்களை சந்தித்து இருக்கிறோம். அதேபோன்று இந்த தேர்தலிலும் எங்களுக்கு இருக்கும் தனித்தன்மை, அடையாளத்தோடு மாபெரும் வெற்றியை பெறுவோம். தமிழகத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எங்களுடைய சாதனைகளை எடுத்துக்‌கூறி மகத்தான சாதனையை பெறுவோம் என்றார்.

சிங்கம் சிங்கிளாத்தான் வரும்: அதிமுக சிங்கம். அதனால் சிங்கம் வெற்றி பெறும். எங்களை பொறுத்தவரையிலும் தனியாக போட்டியிட்டு வெற்றி பெற்ற வரலாறு இருக்கிறது. சிங்கத்தின் வரலாறுதான் எங்களுடைய வரலாறும். இந்த தேர்தலில் சிங்கிளாக வந்து, நாங்கள் வெற்றியை பெறுவோம் என்றும் ஜெயக்குமார் கூறினார்.

Tags : Nayyar Nagendran ,AIADMK , El discurso de Nayyar Nagendran no provocó ningún problema; La única competencia es presentar un candidato en más puestos: l La alianza con la AIADMK continuará a nivel nacional
× RELATED திருநெல்வேலி தொகுதி பாஜ வேட்பாளர்...