டெஸ்ட் கேப்டனாக ரோகித்... பான்டிங் ஆதரவு

புதுடெல்லி: இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோகித் ஷர்மாவை நியமிக்க வேண்டும் என ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து பான்டிங் நேற்று கூறியதாவது: மும்பை இந்தியன்ஸ் அணியில் நான் இருந்தபோது தான்,  ரோகித் கேப்டன் பொறுப்பை ஏற்றார். முதலில் அந்த அணியின் கேப்டனாக தான் என்னை ஏலத்தில் எடுத்தனர்.  துரதிர்ஷ்டவசமாக,  என்னை அணியில் தக்கவைத்துக் கொள்ளும் அளவுக்கு நான் சரியாக விளையாடவில்லை. எனவே எனக்கு பதில் வேறு சர்வதேச வீரர் விளையாட இடமளிக்க வேண்டும் என்று கூறினார்கள். கூடவே மும்பை அணியின் கேப்டனாக யாரை நியமிக்கலாம் என்றும் அணி நிர்வாகம் என்னிடம் கேட்டது. அப்போது, ஒரு  இளைஞன் மட்டும்தான் அணியை வழி நடத்த முடியும். அந்த இளைஞனின் பெயர் ரோகித் என்று கூறினேன்.

அப்படி பொறுப்பேற்றதற்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அந்த இளைஞன் என்ன செய்தார் என்பதற்கு ஆதாரங்கள்  தாராளமாக உள்ளன. அவர் வெற்றிகரமான தலைவராக இருக்கிறார். இடையில் இந்திய அணியை வழி நடத்த வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அதனால் அவர் டெஸ்ட் அணிக்கும் கேப்டனாக பொறுப்பேற்க வேண்டும். எனினும், 3 வகை கிரிக்கெட் போட்டிக்கும் ஒரே கேப்டனா என்தை  பிசிசிஐ தான் முடிவு செய்ய வேண்டும். ரகானேவுடன் விளையாடி இருக்கிறேன். அவர் மிகச்சிறந்த வீரர். இப்போது ரன் குவிக்க சிரமப்படுகிறார். ஆனால், கேப்டனாக கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா தொடரில்  அவர் சாதித்ததை பார்த்து இருக்கிறோம்.

இனி விராத் அசத்துவார்: கோஹ்லி வருகைக்கு முன்பு இந்தியா உள்நாட்டு தொடர்களில் நிறைய வென்றது. வெளிநாட்டில் அப்படி வெற்றிகளை பெறவில்லை. அதிலும் சாதித்து காட்டினார் கோஹ்லி. அதற்கு இந்திய அணி பெருமைப்பட வேண்டும். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின்போது டெஸ்ட் கேப்டன் பதவி குறித்து கோஹ்லி நிறைய பேசினார். தொடர்ந்து டெஸ்ட் கேப்டனாக இருக்க வேண்டும் என்று விரும்புவதாக கூறியபோது அவர் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்தார். இருப்பினும் அவர் ஏன் டெஸ்ட் கேப்டன் பதவியை விட்டு விலகினார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஏற்கனவே அவரிடம் பேசியதால் இந்த முடிவு எனக்கு ஆச்சர்யமளித்தது. அதே சமயம் 33 வயதாகும் கோஹ்லி கேப்டனாக இல்லாவிட்டாலும், மேலும் பல ஆண்டுகளுக்கு ஒரு வீரராக பல்வேறு சாதனைகளை படைப்பார். கேப்டனாக இல்லாததால், எந்த அழுத்தமுமின்றி சிறப்பாக விளையாடி பல சாதனைகளை முறியடிப்பது அவருக்கு எளிதாக இருக்கும் என நினைக்கிறேன். இவ்வாறு பான்டிங் கூறியுள்ளார்.

Related Stories: