×

காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களின் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது

சென்னை: காஞ்சிபுரம், விழுப்புரம், நெல்லை, தூத்துக்குடி, தஞ்சை, வேலூர் மாவட்டங்களில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490  பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி  நடக்கிறது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி  நடைபெற்று வருகிறது. வருகிற 4ம் தேதி வேட்புமனு தாக்கல் முடிகிறது.  வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் குறுகிய நாட்களே உள்ளதால் அரசியல்  கட்சிகளும் இறுதி கட்ட கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். திமுக,  கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், விசிக, தமிழக வாழ்வுரிமை கட்சி  உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் திமுக தலைவரும், முதல்வருமான  மு.க.ஸ்டாலினை சந்தித்து தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை  நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதே  நேரத்தில் அந்தந்த மாவட்டங்களில் திமுக மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள்  கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளனர்.  நேற்று காலை இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை அனைத்து மாவட்டங்களிலும்  முடிவடைந்தது. இதில் கூட்டணி கட்சிகளுக்கான இடங்கள் முடிவு செய்யப்பட்டு  ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிலையில் தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கீடு  செய்யப்பட்ட இடங்களை தவிர, திமுக போட்டியிடும் இடங்களை முறைப்படுத்தி,  அவற்றில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பெயர் பட்டியலை சென்னையில் உள்ள  கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மாவட்ட  செயலாளர்கள் அனுப்பி வைத்துள்ள வேட்பாளர் பட்டியலை மு.க.ஸ்டாலின் நேற்று  தீவிரமாக பரிசீலித்தார். மேலும் பொது செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட  கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் வேட்பாளர் தேர்வு தொடர்பாக ஆலோசனை  நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பிறகு நேற்று இரவு திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் வேலூர் கிழக்கு, வேலூர் மத்தி, தஞ்சை மத்திய மாவட்டம், நெல்லை கிழக்கு, நெல்லை மத்தி, தூத்துக்குடி தெற்கு, தூத்துக்குடி வடக்கு, விழுப்புரம் மத்திய மாவ்டடம், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டங்களில் உள்ள நகராட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில், காஞ்சிபுரம், நெல்லை, தூத்துக்குடி. தஞ்சை மாநகராட்சியின் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Dimuka ,Kanjipuram ,Velur ,Vilupuram , Se ha publicado la lista de candidatos de DMK de distritos, incluidos Kanchipuram, Vellore y Villupuram
× RELATED தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக...