இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் விக்கிரம ராஜசிங்கன் வரலாற்று தகவல்கள் அடங்கிய ஓவியங்களுடன் புதுப்பொலிவு பெறும் கண்டி மஹால்-வேலூர் கோட்டையில் சீரமைப்பு பணிகள் தீவிரம்

வேலூர் : இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் வேலூர் கோட்டையில் உள்ள கண்டி மஹாலில் 17 ஆண்டுகள் குடும்பத்துடன் சிறை வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் மன்னரின் வரலாற்று தகவல்கள் அடங்கிய ஓவியங்களுடன் கட்டிடம் புதுப்பொலிவு பெறும் வகையில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

வேலூர் கோட்டை கி.பி.16ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசு காலத்தில் கட்டப்பட்டதாகும். இக்கோட்டை, வேலூருக்கு இன்றும் பெருமை சேர்த்து வருகிறது. கோட்டைக்குள் திப்பு மகால், ஐதர் மகால், பாஷா மகால், கண்டி மகால், பேகம் மஹால் ஆகிய பழமை வாய்ந்த கட்டிடங்கள் உள்ளன. மேலும் ஜலகண்டேஸ்வரர் கோயில், தேவாலயம், மசூதி, அரசு அருங்காட்சியகம், போலீஸ் பயிற்சி பள்ளி, பொதுப்பணித்துறை உள்பட அரசின் பல்வேறு துறை அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன.

பல்வேறு வரலாற்று தகவல்களை கொண்ட கோட்டை கட்டிடங்களை சீரமைப்பதுடன், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கோட்டையை மேம்படுத்த தொல்லியல் துறையினர் திட்டமிட்டுள்ளனர். முதற்கட்டமாக கோட்டை வெளி மைதானம் பூங்காவாக மாற்றியமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும் மக்கான் சிக்னலை ஒட்டியுள்ள பூங்காவும் சீரமைக்கப்பட்டுள்ளது. இப்பணியில் தொல்லியல் துறை, சுற்றுலாத்துறை, மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.  

இந்நிலையில் இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் விக்கிரமராஜசிங்கன் மற்றும் அவரது குடும்பத்தினர் சிறை வைக்கப்பட்டிருந்த கண்டி மகால் கட்டிடம் கோட்டைக்குள் உள்ளது. இந்த கண்டி மஹாலில் விக்கிரம ராஜசிங்கன் 17 ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டிருந்தார். அவர் சிறையிலேயே மரணமடைந்தார். நேற்று அவரது 190வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில் கண்டி மஹாலை பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கக்கோரி கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை எழுந்து வந்தது.

இதையடுத்து கடந்த 2018ம் ஆண்டு பொதுமக்கள் பார்வைக்காக கண்டி மஹாலும் திறந்து வைக்கப்பட்டது. ஆனால் கட்டிடம் மிகவும் பழுதடைந்ததால் பொதுமக்கள் பார்வையிட உள்ளே செல்லாமல் வெளியே இருந்தவாறு பார்வையிட்டு சென்று வந்தனர். இதனால் கண்டி மஹால் பழமை மாறாமல் அதை சீரமைக்க தொல்லியல் துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி  சீரமைப்பு பணிகள் தற்போது தொடங்கி உள்ளது. பழைய கட்டிட மேல் தளத்தில் உள்ள சிதிலமடைந்த கற்கள் அகற்றப்பட்டுள்ளது. தற்போது கட்டிடத்தை சீரமைத்து புதுப்பொலிவு பெற செய்யும் வகையில் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் பணிகள் முடிந்து, அங்கு விக்கிரமராஜசிங்கன் குறித்த வரலாற்று தகவல்கள், தகவல்களை வெளிப்படுத்தும் ஓவியங்களுடன் விரைவில் கண்டி மகால் கட்டிடம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: