×

பர்கூர் அருகே வெண்சாந்தால் வரையப்பட்ட 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகமும், மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து, பர்கூர் ஒன்றியம் ஐகுந்தம் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவ்வூரை சேர்ந்த சதாம், அண்ணாச்சி(எ)வெங்கடாசலபதி ஆகியோர் அளித்த தகவலின் பேரில், ராஜாமணியின் மகன் பாலச்சந்திரன் என்பவரது நிலத்தை ஒட்டி அமைந்துள்ள பஜாரிகுண்டு என்ற பாறையில் வெண்சாந்தால் வரையப்பட்டுள்ள சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பாறை ஓவியங்களை கண்டறிந்து ஆய்வு செய்தனர்.

ஓவியங்கள் குறித்து அருங்காட்சியகக் காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: இந்த ஓவியங்கள் இரண்டு காலகட்டங்களில் வரையப்பட்டுள்ளது. முதல் காலகட்ட ஓவியங்கள் மங்கலாகவும், இரண்டாம் காலகட்ட ஓவியங்கள் தெளிவாகவும் உள்ளன. முதல் காலகட்ட ஓவியங்களில் விலங்கு ஒன்றும், விலங்கு முகத்துடன் கிடை நிலையில் வரையப்பட்டுள்ள ஆண் உருவமும் உள்ளது. பாறையின் இடது பக்கத்தில் மூன்று விலங்கின் மீது மனித உருவ ஓவியங்கள் உள்ளன. இரண்டாம் கட்ட ஓவியங்களில், பாறையின் வலது பக்கத்தில், கேடயம் தாங்கிய பெரிய மனித உருவமும், இரண்டு பக்கத்திலும் சிறிய மனித உருவங்களும் உள்ளன. வலது பக்கத்தில் உள்ள உருவத்தின் தலைமீது அரைவட்டம் காட்டப்பட்டுள்ளது. இந்த அமைப்பு வேறு சில பாறை ஓவியங்களிலும் காணப்படுகின்றன.

இந்த ஓவியத்துக்கு மேல், வடஇந்திய முத்திரைக் காசுகளில் காணப்படும் உஜ்ஜைனி குறியீடு வரையப்பட்டுள்ளது. உஜ்ஜைனி குறியீடு என்பது ஒரு கூட்டல் குறியின் நான்கு முனைகளிலும் புள்ளியுடன் கூடிய சிறு வட்டங்களுடன் இருப்பதாகும். இங்கு கூட்டல் குறியின் கீழ் மூன்று முனைகளை அரைவட்டமாய் இணைத்து வரையப்பட்டுள்ளது. இக்குறியீடு தமிழகத்துக்கும், வட இந்தியாவுக்கும் இருந்த வணிக உறவை புலப்படுத்துகிறது.

அண்மையில், இதே ஊரில் கண்டறிந்து வெளிப்படுத்திய 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த வணிகக்குழு கல்வெட்டையும் இங்கு ஒப்புநோக்க வேண்டியுள்ளது. சங்க காலம் தொடங்கி சுமார் ஆயிரம் ஆண்டுகளாக இந்த ஊர் ஒரு முக்கிய வணிகத்தலமாக இருந்துள்ளதையே இவ்விரண்டு கண்டுபிடிப்புகளும் உணர்த்துகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது, கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் மற்றும் பாறை ஓவிய ஆய்வாளர் சதானந்த கிருஷ்ணகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.


Tags : Bronchanthal ,Burkur , Krishnagiri: Krishnagiri District Government Museum in association with the District Historical Research and Documentation Committee, Bargur
× RELATED பர்கூர் அருகே சென்டர் மீடியனில் மினி வேன் மோதி விபத்து: 3 பேர் படுகாயம்