×

நாகை மாவட்டம் கோடியக்கரையில் குவிந்த 2.87 லட்சம் பறவைகள்: கணக்கெடுப்பில் தகவல்

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் கோடியக்கரை பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு ரஷ்யா, சைபீரியா, கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்தும், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்து ஆண்டுதோறும் ஏராளமான பறவைகள் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் இங்கு வந்து தங்கி செல்வது வழக்கம். இந்தாண்டு வரவாக கடற்காகம், கடல் ஆலா, செங்கால் நாரை, கூழை கிடா, கொக்கு, உள்ளான் வகைகள் உட்பட 247 வகையான பறவைகள் வந்துள்ளன.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்து வந்தது. கணக்கெடுப்பு பணி முடிந்ததும் திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சத்தீஷ் கூறுகையில், ‘‘கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் தற்போது 2 லட்சத்து 87 ஆயிரம் பறவைகள் குவிந்துள்ளன’’ என்றார். கோடியக்கரை பறவைகள் சரணாலயத்துக்கு இந்தாண்டு அக்டோபர் முதல் ஜனவரி வரை சுமார் 5 லட்சம் பறவைகள் வந்து சென்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தாண்டு அதிகளவில் பறவைகள் வந்துள்ளது.

முத்துப்பேட்டை

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக்காடு ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய பரப்பரளவு கொண்ட காடாகும். அலையாத்திக்காட்டில் சீசன் காலங்கள் மட்டுமின்றி ஆண்டு முழுவதும் ஆயிரக்கணக்கான பறவைகள் வந்து செல்கின்றன. சீசன் நேரத்தில் லட்சக்கணக்கான பறவைகள் வலம் வருவது வழக்கம். இந்த நிலையில் வனத்துறை சார்பில் முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடத்தப்பட்டது. இதில் 1,50,000க்கும் அதிகமான பறவைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதில் குறிப்பாக பூ நாரை, உள்ளான் வகைகள், சிறவி வகைகள் குறிப்பிட்டதக்கதாகும் என்று மாவட்ட வன அலுவலர் அறிவொளி தெரிவித்தார்.

Tags : Nagam district Kodiakkara , Naga, Kodiakkarai, 2.87 lakh, birds
× RELATED வெடி விபத்து: குவாரி நிர்வாகம் சார்பில் ரூ.12 லட்சம் நிவாரணம்