கணக்கெடுக்கும் பணி நிறைவு கோடியக்கரை சரணாலயத்தில் 2.87 லட்சம் பறவைகள் உள்ளன-திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் தகவல்

வேதாரண்யம் : வேதாரண்யம் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் 2 லட்சத்து 87 ஆயிரம் பறவைகள் உள்ளது என்று திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சத்தீஷ் தெரிவித்தார்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு ரஷ்யா, சைபீரியா, கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்தும், இமாசல பிரதேசம் உள்ளிட்ட இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்து ஆண்டுதோறும் ஏராளமான வெளிநாடு மற்றும் உள்நாட்டு பறவைகள் அக்டோபா் முதல் மார்ச் வரை காலகட்டத்தில் இங்கு உணவுக்காக வந்து தங்கி செல்வது வழக்கம்.

இந்த ஆண்டு வரவாக கடற்காகம், கடல் ஆலா, செங்கால் நாரை, கூழை கிடா, கொக்கு, உள்ளான் வகைகள் உட்பட 247 வகையான பறவைகள் வந்துள்ளன. இந்த ஆண்டு கடந்த 2 நாட்களாக பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வந்தது. இதில் கல்லூரி மாணவா்கள், தன்னார்வலர்கள், வனத்துறை அலுவலர்கள் 15 வழிதடங்களில் ஈடுபட்டு கணக்கெடுப்பு நடத்தினர். கணக்கெடுப்பு பணி முடிந்துவுடன் திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலா் சத்தீஷ் கணக்கெடுப்பு விவரம் குறித்து தெரிவித்தார்.

அதன்படி கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு இந்த ஆண்டு தற்போது 67 வகையான பறவைகள் என மொத்தம் 2 லட்சத்து 87 ஆயிரம் இருப்பதாக அறிவித்தார். உடன் கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கான் உட்பட வனத்துறையினர் இருந்தனர். கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு இந்த ஆண்டு அக்டோபர் முதல் ஜனவரி வரை சுமார் 5 லட்சம் பறவைகள் வந்து சென்றுள்ளது.கடந்த 10 கண்டுகளில் இந்த ஆண்டு அதிகளவில் பறவைகள் வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories: