×

உடுமலை அரசு பள்ளிக்கு ரூ.1 லட்சம் வழங்கிய இளநீர் பெண் வியாபாரிக்கு மன் கி பாத்தில் பிரதமர் பாராட்டு

உடுமலை: உடுமலை அரசு பள்ளிக்கு ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கிய உடுமலை இளநீர் பெண் வியாபாரி தாயம்மாள் குறித்து மன்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசி பாராட்டு தெரிவித்தார். திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சின்னவீரம்பட்டி அரசு ஆரம்பப்பள்ளியில் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி உள்ளனர். ஓட்டு கட்டிடமாக இருந்த பள்ளியை கான்கிரீட் கட்டிடமாக மாற்றி கூடுதல் வகுப்பறைகளை உருவாக்க நமக்கு நாமே திட்டம் மூலம் பொதுமக்களிடம் நன்கொடை கோரப்பட்டது.

இதனை அறிந்த அதே ஊரை சேர்ந்த இளநீர் வியாபாரியான தாயம்மாள், ₹1 லட்சம் நன்கொடை வழங்கினார். தாயம்மாள் மற்றும் அவரது கணவர் ஆறுமுகம் (எ) அய்யாவு ஆகியோர் செய்த உதவியை ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். இளநீர் விற்று சிறுகச் சிறுக சேர்த்த தொகையை பள்ளி கட்டிடம் கட்ட வழங்கியது அனைவராலும் பெரிதும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை  11.40 மணி அளவில் மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது பள்ளிக்கு தாயம்மாள் செய்த உதவி குறித்து பாராட்டினார்.
‘‘இதுபோன்ற ஏழை எளியவர்கள் கல்விக்கு உதவுவது நாட்டுக்குப் பெருமை சேர்ப்பதாகும்’’ என புகழாரம் சூட்டினார். இது குறித்து தாயம்மாள் கூறுகையில், எனது மகனும், மகளும் இந்த பள்ளியில்தான் படித்தார்கள். படிப்பு என்பது அழியா சொத்து. காலத்துக்கும் உதவும். காசா, படிப்பா என்றால் படிப்புதான் முக்கியம். நான் படிக்கும் காலத்தில் ரொம்ப கஷ்டம். 5ம் வகுப்பு வரைதான் படித்தேன். அதனால் மற்ற குழந்தைகள் படிப்புக்கு உதவ வேண்டும் என நினைத்தேன். என்னால் முடிந்த உதவியை செய்தேன்.

நான் உதவி செய்தது இந்த அளவுக்கு வெளியே தெரியும் என நினைக்கவில்லை. ஒருவருக்கு உதவுவது மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்பது பெரியவர்களின் சொல். ஆனால் நூறு கோடி மக்கள் வாழும் நாட்டின் பிரதமர் எனது உதவி குறித்து பேசியது எனக்கு பெருமை அளிப்பதாக உள்ளது. கல்விக்கு உதவி செய்வது என்பது மிகப்பெரிய உதவியாகும். அதற்காக நான் பெருமைப்படுகிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Tags : Mann Ki Baat ,PM ,Udumalai Government School , Mann Ki Baat praises PM for donating Rs 1 lakh to Udumalai Government School
× RELATED 2024-25ஆம் கல்வி ஆண்டின் இளநிலை மருத்துவ...